ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புது சர்ச்சை தீர்த்த டிக்கெட் வழங்கியதில் பல லட்ச ரூபாய் முறைகேடு: வரிசை எண் இல்லாமல் அச்சடித்து சுருட்டல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தக் கட்டண டிக்கெட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதனால் கோயிலுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள், பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ராமேஸ்வரத்தில் உள்ள பிரபலமான ராமநாத சுவாமி கோயிலில் 22 தீர்த்தக் கிணறுகளில் நீராடுவதற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் தினமும் வந்து செல்கின்றனர். புனித நீராடலுக்கு ஒருவருக்கு ₹25 கட்டணம் பெற்று,  கையில் அணியும் கைப்பட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த கைப்பட்டைகளில் வரிசை எண் இல்லாத பட்டைகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளது. இதனை கையில் கட்டி தீர்த்தமாடச் சென்ற பக்தர்களை, செக்யூரிட்டிகள் தடுத்து  நிறுத்தினர். மொத்தம் 36 பேரிடம் கைப்பட்டைகளை பறிமுதல் செய்து, கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.இதையடுத்து, அனுமதி பட்டைகள் வழங்கப்படும் இடமான தீர்த்தக்கவுன்டரில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு, வரிசை எண் அச்சிடப்படாத 180 கைப்பட்டைகளை கைப்பற்றினர். கவுன்டரில் பணியில் இருந்த கடைநிலை ஊழியர்கள்  சந்தோஷ் மற்றும் பிரதாப் இருவரையும் விசாரணை செய்த கோயில் இணை கமிஷனர் இருவருக்கும் அபராதம் விதித்தார். தொடர்ந்து கைப்பட்டைகள் மொத்தமாக வைக்கப்படும் அறையிலும் சோதனை செய்யப்பட்டது. அங்கு வரிசை எண்  அச்சிடப்படாத கைப்பட்டைகள் ஏராளமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 தலா நூறு எண்ணிக்கை கொண்ட கைப்பட்டை கட்டுகளில், ஒவ்வொரு கட்டிலும் இடையிடையே வரிசை எண் அச்சிடப்படாத கைப்பட்டைகள் 10 முதல் 20 வரை இருந்துள்ளது. இதுபோல் அனைத்து கைப்பட்டை கட்டுகளிலும்  இருந்தது  அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. சிவகாசி, தனியார் அச்சகத்திலிருந்து இந்த அனுமதி கைப்பட்டைகள் அச்சடிக்கப்பட்டு கட்டுகள் போடும்போதே பத்து முதல் 20 வரையிலான கைப்பட்டைகள் இடையிடையே வைக்கப்பட்டு  கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து கோயில் பணியாளர்கள் சிலர் கூறுகையில், ‘‘அச்சகத்தினர் மற்றும் கோயில் ஊழியர்கள் இணைந்து இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டிருக்கின்றனர். பல ஆண்டுகளாக கணக்கில் வராத ஆயிரக்கணக்கான கைப்பட்டைகள்  நாள்தோறும் பக்தர்களிடம் வழங்கப்பட்டு பல லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டில் கோயில் தேவஸ்தான அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த ஊழியர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பொறுப்பில்  இருந்த பலருக்கும் தொடர்பு இருக்கிறது. ஆனால், தீர்த்த டிக்கெட் கவுன்டரில் இருந்த இரு கடைநிலை ஊழியர்கள் மீது மட்டும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது’’ என குற்றம் சாட்டினர்.ராமேஸ்வரம் கோயிலில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்த டிக்கெட்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பிறகே, கையில் அணிந்து செல்லும் வகையிலான கைப்பட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலும்   கைவரிசையை காட்டி பல லட்சங்கள் பார்த்து கோயிலுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியிருப்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: