திருச்சி கல்லூரியில் மோதலில் ஈடுபட்டனர் அரசு மருத்துவமனையை சுத்தம் செய்த மாணவர்கள்: நீதிமன்றம் நூதன தண்டனை

திருச்சி: திருச்சி கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றம் அளித்த நூதன தண்டனையின்படி அரசு மருத்துவமனையை மாணவர்கள் சுத்தம் செய்தனர். திருச்சி ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் சில மாதங்களுக்கு முன் விடுதியில் தங்கி படித்த சீனியர் ஜூனியர் மாணவர்களிடையே  மோதல் ஏற்பட்டது. அவர்கள் கிரிக்கெட் பேட், ஸ்டம்புகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் கல்லூரி கேண்டீனில் இருந்த சோடா பாட்டில்களையும் எடுத்து வீசி மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக எடமலைப்பட்டிபுதூர் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 28 மாணவர்களை கைது செய்தனர். இந்தநிலையில் 28 பேரும், தாங்கள் சமாதானமாக செல்கிறோம். எங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருச்சி கிஆபெ அரசு மருத்துவமனையை ஒருநாள் சுத்தம் செய்யும்படி மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கியது. இதை கண்காணிக்க குழுவையும் அமைத்து இது தொடர்பான அறிக்கையை வரும் 26ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி மருத்துவமனையை சுத்தம் செய்வதற்காக 28 மாணவர்களும் நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். முதலில் அவர்களுக்கு டாக்டர் நிரஞ்ஜிதா தலைமையில் கவுன்சலிங் அளிக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்தனர்.

Related Stories: