திருவொற்றியூர் கார்கில் நகர் குடிசை மாற்று வாரிய கட்டிட வழக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டிடம் கட்டுவது தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டு கூட்டு ஆய்வறிக்கை தாக்கல் செய்யுமாறு கூடுதல் அட்வகேட் ஜெனரல் மற்றும் வழக்கு தொடர்ந்தவரின் வக்கீலுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.  திருவொற்றியூர் கார்கில் நகரில் இருக்கக்கூடிய ஏரி நிலத்தில் தமிழக குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசோக் லேலண்ட் தொழிலாளர் குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், அனைவருக்கும் வீடு திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ் 11 அடுக்குமாடி கொண்ட 1200 வீடுகளை திருவொற்றியூரில் உள்ள கார்கில் நகரில் கட்ட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.   

மழைக்காலங்களில் நீர்தேங்கும் ஏரியில் கட்டிடம் கட்டினால் அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கிவிடும். இதையடுத்து, கடந்த 2005ம் ஆண்டு ஏரி நிலங்களில் கட்டிடம் கட்ட ஏதுவாக இருந்தால், கட்டிடம் கட்டலாம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஏரி நிலத்தில் கட்டிடம் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போ இது தொடர்பாக சம்மந்தமாக வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டனர். அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன், மனுதாரரின் வக்கீல் மோகன் ஆகியோர் தாங்களே நேரில் சென்று ஆய்வு செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் நேரில் ஆய்வு செய்து வரும் 26ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: