அரசுப் பள்ளிகளில் 75% பெண் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்; மாணவிகள் சோதனை குறித்து அச்சப்பட தேவையில்லை...அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: குஜராத் மாநிலம், பூஜ் நகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் மாணவிகள் 68 பேருக்கு மாதவிடாய் இருக்கிறதா என அவர்களின் ஆடைகளை அவிழ்த்து சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனை கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இது நடந்த  அடுத்த சில தினங்களில் மீண்டும் சர்ச்சைக்குரிய சம்பவம் சூரத்தில் நடந்துள்ளது.சூரத் மாநகராட்சியில் 3 ஆண்டு பயிற்சி முடித்த கிளார்க்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம். இந்த பரிசோதனை மாநகராட்சி  மருத்துவமனையிலேயே நடக்கும். இது போல், நேற்று முன்தினம் மாநகராட்சி பயிற்சி பெண் ஊழியர்கள் சிலர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பெண் டாக்டர்களால் வலுக்கட்டாயமாக முழு  நிர்வாணப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளில் 75% பெண் ஆசிரியர்களே பணியாற்றுவதால்  தேர்வு எழுதும் மாணவிகள் சோதனை குறித்து அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். பள்ளிக்கூடங்களில் உள்ள கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்யும் நிலை இனி வராது. பள்ளிகளில் துப்பரவு பணியாளர்கள், அலுவலக  உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

2012-2014-ம் ஆண்டு வரை ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவது ஆதாரமற்ற புகார் என்றும் ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்ததாக புள்ளி விவரங்களுடன் புகார் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் கூறினார்.

Related Stories: