பொன்மலை ரயில்வே காலனியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்: தொற்று நோய் பீதியில் குடிமக்கள் அச்சம்

திருச்சி:  பொன்மலை நார்த்-டி ரயில்வே காலனி பகுதியில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. நீண்ட நாளாக இக்கழிவுகள் கொட்டப்பட்டு வருவதை ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என அப்பகுதி குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.  திருச்சி பொன்மலையில் 80 வருடத்திற்கும் மேலாக ரயில் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் குடும்பத்திற்காக ரயில்வே சுற்றியுள்ள பகுதியில் குடியிருப்பு காலனிகள் உருவாக்கப்பட்டது. இதில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இங்கு வசிப்பவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகள், சுகாதார சீர்கேடுகள் என பிரச்னைகளை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் அப்பகுதியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடு.

அதிலும் பொன்மலை நார்த்-டி கேட் பகுதியில் இருந்து அம்பிகாபுரம் செல்லும் சாலையில் இறைச்சி கழிவுகள் அதிகளவில் தினந்தோறும் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் அப்பகுதியை சுற்றிலும் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி கடைகள் என பரவலான இடங்களில் உள்ளன. இந்த கடைகளிலிருந்து இறைச்சி கழிவுகளை கடைக்காரர்கள் முறையாக கொட்ட வேண்டிய இடத்தில் கொட்டாமல் பொன்மலை ரயில்வே காலனி பகுதியில் வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கும் அந்த பகுதியை கடந்து செல்பவர்களுக்கும் பல்வேறு விதமான நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்தனர். இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தால் அதைப்பற்றி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதே இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பொன்மலை ரயில்வே காலனியானது மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருப்பதால் மாநகராட்சி ஊழியர்களையும், ரயில்வே நிர்வாகம் தூய்மைப்படுத்த விடுவதில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

Related Stories: