ஆட்சி போய்விட்டால் சிறைக்குச்செல்ல நேரிடும் என அஞ்சியே பாஜ அரசின் குடியுரிமை திருத்த சட்டம் உட்பட அனைத்தையும் எடப்பாடி அரசு ஆதரிக்கிறது: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

சென்னை: ஆட்சி போய்விட்டால் சிறைக்குச் செல்ல நேரிடும் என அஞ்சியே பாஜ அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் உட்பட அனைத்தையும் எடப்பாடி அரசு ஆதரிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் பற்றி அரசிடம் உரிய பதில் வரவில்லை என்று எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.  வெளிநடப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் 2 முக்கியமான பிரச்னைகளை எழுப்பினேன். 18 எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக அல்ல, ஆளுநரிடம் மனு அளித்தார்கள்.  முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று மனு அளித்த காரணத்திற்காக 18 எம்எல்ஏக்களையும் உடனடியாக சபாநாயகர் நீக்கினார். ஆனால், அந்த ஆட்சியே இருக்கக்கூடாது என ஆட்சியை எதிர்த்து வாக்களித்த 11 பேருக்கு இன்னும் சபாநாயகர் தீர்ப்புத் தரவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை. அது என்னவாயிற்று? அந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டு, சபாநாயகர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்கள்.  

Advertising
Advertising

சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். ஆனால் பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. சிறிது நேரம் பேசியதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள். அடுத்து சிஏஏ விவகாரம். இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் பற்றிப் பலமுறை அவையில் கேள்வி எழுப்பியுள்ளோம். தமிழகம் தவிர்த்து, பல மாநிலங்களில் இதை எதிர்த்து, கண்டித்து, திரும்பப் பெறவேண்டும் என தீர்மானமே நிறைவேற்றி உள்ளார்கள். இதுகுறித்து பலமுறை அவையில் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பிஆர் என்னும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பையாவது தடுத்து நிறுத்துங்கள், ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தக்கூடிய வகையில் இந்தப் பிரச்னையை இன்று அவையில் எழுப்பினேன். ஆனால் சம்பந்தமில்லாமல் முதலமைச்சர் சொல்ல வேண்டிய பதிலை, வருவாய்த்துறை அமைச்சர் பிரசாரத்தில், பொதுக்கூட்டத்தில் பேசுவது போல வீராவேசமாக கூறினார்.

ஏதோ வாக்கு வங்கிக்காக நாங்கள் அலைந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்.

நாங்கள் வாக்கு வங்கிக்காக அலைகிறோம் என்று வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும், நீங்கள் இதற்கு வக்காலத்து வாங்குவதற்கு என்ன காரணம்? பாஜ ஆட்சிக்கு அஞ்சி, நடுங்கி, கைகட்டி, வாய் பொத்தி, ஆட்சி உடனே போய்விடும் என்று பயந்துதானே?. ஆட்சி போய்விட்டால், சிறைக்குச் செல்ல நேரிடும் என அஞ்சுகிறார்கள். காரணம் இவர்களின் வண்டவாளங்கள் அனைத்தும் அவர்களிடம் (மத்திய அரசிடம்) சிக்கி இருப்பதால், அவை தண்டவாளத்தில் ஏற்றப்பட்டுவிடும் என்பதுதான். அதற்குப் பயந்து கொண்டு, அவர்கள் கூறுவதையெல்லாம் கும்பிட்டு, அவர்கள் காலில் விழுந்து ஏற்றுக் கொள்கிறார்களே தவிர, மக்களைப் பற்றி இவர்கள் கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை என்பதுதான் உண்மை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: