மாநில அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசும் முன்வர வேண்டும்:ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மாநில அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசும் முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அக்கட்சியின் பாட்டாளி இளைஞர் சங்கம் சார்பில் சென்னையில் சமீபத்தில் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்தக் கோரிக்கை அதிமுகவுடன் கூட்டணி வைக்கும்போது பாமக முன்வைத்த 10 அம்சக் கோரிக்கைகளுள் ஒன்றானதாகும்.

Advertising
Advertising

இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானம் ஒடிசா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ் அதனை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ராமதாஸ் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் ஒடிசாவில் பிற்படுத்தப்பட்டோரின் சாதிவாரி சமூக பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான சட்டத் திருத்தமும், தீர்மானமும் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மத்திய அரசு இத்தகைய கணக்கெடுப்பு நடத்தாத நிலையில் ஒடிசா அரசே கணக்கெடுப்பு மேற்கொள்வது பாராட்டத்தக்க செயலாகும் என ராமதாஸ் கூறினார். மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒடிசா தீர்மானித்திருப்பதற்கு என்னென்ன காரணங்கள் உண்டோ அவை அனைத்தும் தமிழகத்திற்கும் பொருந்தும். எனவே மாநில அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசும் முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

Related Stories: