நிர்பயா பாலியல் பலாத்கார, கொலை குற்ற வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ந் தேதி தூக்கிலிடுவதற்கான புதிய வாரண்ட் பிறப்பிப்பு

புதுடெல்லி: நிர்பயா பாலியல் பலாத்கார, கொலை குற்ற வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3ந் தேதி தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை மரண தண்டனைக்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3வது முறையாக மீண்டும் வாரண்ட்டை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மார்ச் 3ந் தேதி காலை 6 மணிக்கு முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் தாக்கூர் ஆகிய 4 பேரும் தூக்கிலிடப்பட உள்ளனர்.

நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?

*நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான புதிய தேதியை அறிவிக்குமாறு தொடர்ந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி தர்மேந்தர் ரானா, முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

*அப்போது, குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் மாதம் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுவதற்கான தேதியை வெளியிட்டு, புதிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

*முன்னதாக, முகேஷ் குமார் சிங் சார்பில் ஆஜராக, அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் விரிந்தா க்ரோவர் தனக்காக வாதாட வேண்டாம் என்று முகேஷ் குமார் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து, முகேஷ் குமார் சிங் தரப்பில் ஆஜராக அரசு வழக்கறிஞர் ரவி குவாஸியை நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது.

*அதே சமயம், திகார் சிறையில் குற்றவாளி வினய் ஷர்மா உண்ணாவிரதப் போராட்டம் இருப்பதாக சிறைத் துறை நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு வினய் ஷர்மாவின் உடல்நலனை கவனிக்குமாறு சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

*மேலும், பவன் குப்தா தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கவும், உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்யவும் முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

*அதேபோல மற்றொரு குற்றவாளி அக்சய் குமார் தரப்பில், குடியரசுத் தலைவருக்கு மீண்டும் கருணை மனு அனுப்பத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் பின்னணி

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது. டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் தண்டனையை உறுதி செய்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு, மறுஆய்வு மனு, மற்றும் சீராய்வு மனுக்கள் மாறி, மாறி தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவது 2 முறை தள்ளிப்போனது.இதற்கிடையே, நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுதாக்கல் செயயப்பட்டது.

Related Stories: