கள்ளக்குறிச்சி - உளுந்தூர்பேட்டை ரயில் பாதை அமைக்கும் பணி முடக்கம்: எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் கிராமத்தில் ரயில் நிலையம் உள்ளது.  இவ்வழியாக தினமும் 50க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வந்தாலும், ஒரு எக்ஸ்பிரஸ் ரயில்கூட உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வது இல்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் விழுப்புரத்தில் இருந்து மதுரை வரையில் செல்லக்கூடிய ஒரு பயணிகள் ரயில் மட்டும் பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இந்த ரயில் அனைத்து வழித்தடத்திலும் நின்று செல்வதால் பயணிகள் குறைந்த அளவிலேயே சென்று வருகின்றனர். சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த ரயில் பயணிகள் விழுப்புரம், விருத்தாசலத்திற்கு சென்று அங்கிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்களில் சென்று வருகின்றனர்.

Advertising
Advertising

எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டுமென உளுந்தூர்பேட்டை வளர்ச்சி குழுவினர் ரயில்வே அமைச்சர் மற்றும்  சேர்மன், தென்னக ரயில்வே அதிகாரிகள்  கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துள்ளனர். உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தின் போது எக்ஸ்பிரஸ் ரயில்  பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என தங்களது கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளனர். இது மட்டுமன்றி எம்பிக்கள் சிபிஎம் ரங்கராஜன், அதிமுகவை சேர்ந்த மறைந்த விழுப்புரம் முன்னாள் எம்பி ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி முன்னாள் எம்பி காமராஜ், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும், ரயில்வே பயணிகள் குழுவின் தலைவருமான ராஜா, தற்போதைய விழுப்புரம் எம்பி ரவிக்குமார் உள்ளிட்டோர்  பரிந்துரை கடிதம் அனுப்பியும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எக்ஸ்பிரஸ் ரயிலும் உளுந்தூர்பேட்டை ரயில்நிலையத்தில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து கானல் நீராகவே இருந்து வருகிறது.  இது மட்டுமின்றி உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி பகுதியை இணைக்கும் வகையில் புதிய ரயில்பாதை அமைப்பதற்கான பணிகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.

 புதிய ரயில்பாதை அமைக்க தமிழக அரசு ரூ. 65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், மத்திய அரசு இதற்கான கூடுதல் தொகையினை ஒதுக்கீடு செய்து புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும் என கடந்த கூட்டத் தொடரில் அப்போதைய கள்ளக்குறிச்சி எம்பி காமராஜ் பேசினார். தற்போதை பட்ஜெட் கூட்டத்தொடரிலாவது உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்துவதற்கும், உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு புதிய ரயில்பாதை அமைக்க உரிய நிதி ஒதுக்கீடு செய்து  பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சமூக ஆர்வலர்  ராமசுப்ரமணியன்:

சுதந்திர போராட்டத்துக்கு பாடுபட்ட மகாத்மாகாந்தி உளுந்தூர்பேட்டை ரயில்நிலையத்துக்கு வந்து சென்றுள்ளார். போதிய அடிப்படை வசதிகள் இன்றியும், பயணிகளை ஏற்றி செல்வதற்கும், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லாத நிலையே உள்ளது.  50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், ரயில் பயணிகள் மும்பை, கேரளா, டில்லி, கர்நாடகா, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு விழுப்புரம், விருத்தாசலம் உள்ளிட்ட ரயில்நிலையங்களுக்கு சென்று செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் பெரும் அலைக்கழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி மன்ற கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மான நகல்களை ரயில்வே துறை அதிகாரிகள்,  அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த பட்ஜெட்டிலாவது உளுந்தூர்பேட்டை ரயில்நிலையத்தை மேம்படுத்தி நீண்ட தூரத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வதற்கு உரிய வழிவகை செய்திட வேண்டும்.

வழக்கறிஞர் காமராஜ் பேட்டி:

உளுந்தூர்பேட்டை ரயில்நிலையத்தில் இருந்து இணைப்பு சாலையாக கள்ளக்குறிச்சி வரையில் ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2006ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பணிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டு தமிழக அரசின் சார்பில் ரூ 64.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரையில் இதற்கான அளவீடு பணிகளை கூட துவங்கப்படவில்லை. மத்திய அரசின் சார்பில் போதிய ஒத்துழைப்பு கொடுக்காததால் ரயில்வே துறை அதிகாரிகள் மெத்தன போக்கில் இருந்து வருகின்றனர். உளுந்தூர்பேட்டை- கள்ளக்குறிச்சிக்கு புதிய ரயில்பாதை அமைக்கப்பட்டால் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சிக்கு அரசின் பல்வேறு பணிகளுக்கு எளிதில் சென்று வர முடியும். வியாபாரிகள்- சிறு தொழில் முதலீட்டாளர்கள் எளிதில் சென்னை, திருச்சி உள்ளிட்ட பெரு நகர பகுதிகளுக்கு சென்று வருவதற்கு வசதியாக இருக்கும்.

இது மட்டுமின்றி விவசாயிகள்  மஞ்சள், நெல் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களை கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மார்க்கெட் கமிட்டிகளுக்கு எளிதில் எடுத்து செல்வார்கள். சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற பெரு நகரங்கள் மட்டுமின்றி, திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் சென்னையை நோக்கி பயணம் செய்யும் முக்கிய மையமாக உளுந்தூர்பேட்டை ரயில்நிலையம் இயங்கும். இதனால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், ரயில்பயணிகளின் 50 ஆண்டுகால கோரிக்கையாக உள்ள உளுந்தூர்பேட்டை ரயில்நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க வேண்டும். மற்றும் உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி பகுதிக்கு புதிய ரயில்பாதை அமைக்கும் பணியை விரைந்து துவங்கிட வேண்டும். அப்போது தான் புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் வாழ்வாதாரம் உயரும் என்றார்.

Related Stories: