அதிகரிக்கும் கஞ்சா சாகுபடி ரெய்டுக்கு தயங்கும் என்.ஐ.பி.

கோவை: கோவை வனத்தில் கஞ்சா சாகுபடி அதிகரிக்கிறது. ரெய்டு நடத்த போதை பொருள் தடுப்பு பிரிவு தயங்குகிறது. தமிழகத்தில் தேனி, கம்பம், குமுளி, வருஷநாடு, பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வால்பாறை, பொள்ளாச்சி, வாளையார், ஆனைகட்டி, சிறுமுகை வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி நடக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் குளிர் காற்று, லேசான ஈரப்பதம் உள்ள மலைப்பகுதியில் மட்டும் கஞ்சா சாகுபடிக்கு ஏற்ற நிலங்கள் இருப்பதாக தெரிகிறது. இங்கே ஆண்டுேதாறும் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆண்டுதோறும் 30 முதல் 50 டன் எடையில் விதை நீக்கப்பட்ட உலர்ந்த தரம் பிரித்த கஞ்சா சேகரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நன்கு வளர்ந்த ஒரு கஞ்சா செடியில் 500 முதல் 700 கிராம் கஞ்சா இலை சேகரிக்கப்படுகிறது. கோவை பாரப்பட்டி வனத்தில் 20 ஆண்டிற்கு மேலாக கஞ்சா சாகுபடி நடக்கிறது. வாளையாரில் இரு மாநில வன எல்லையில் அமைந்துள்ள பாரப்பட்டியில் தென்மேற்கு பருவம் துவங்கும் ஜூன் மாதம் சாகுபடி துவக்கப்படும்.

Advertising
Advertising

ஜனவரி, பிப்ரவரியில் அறுவடை செய்யப்படும். அறுவடை செய்த கஞ்சா செடிகளை மலையில் காய வைத்து மூட்டையாக கட்டி தலை சுமையாக ஆனைகட்டி, சந்திராபுரம், வட்டபாறை வனப்பகுதி வழியாக கடத்துவது வாடிக்கையாக நடக்கிறது.

வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி செய்வதற்காக பெரு மரங்களை வெட்டி வீழ்த்தி, புதர்களை அகற்றி தோட்டம் அமைப்பதும் வாடிக்கையாக நடக்கிறது. கடந்த 2012ம் ஆண்டிற்கு பின்னர் பாரப்பட்டி, ஆனைகட்டி, சிறுவாணி வனப்பகுதியில் கஞ்சா பயிர்களை அழிக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தவில்லை. கடந்த 2012ம் ஆண்டில் 15 ஏக்கரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் தீயிட்டு அழிக்கப்பட்டது. பாரப்பட்டியில் கஞ்சா செடிகளை அழிக்க சென்ற போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மீது கஞ்சா கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றது.

போலீசார் அனைவரும் பத்திரமாக திரும்பினர். இந்த சம்பவத்திற்கு பிறகே போலீசார் கஞ்சா சோதனையை நடத்த முன் வரவில்லை. தமிழகத்தின் ‘கஞ்சா பள்ளத்தாக்கு’ என்ற பெருமை தேனி வருஷநாட்டிற்கு உண்டு. இங்கே இருந்துதான் கேரளா, கர்நாடகா, தமிழகத்திற்கு 70 சதவீத கஞ்சா சப்ளை நடந்தது. கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் விளையும் கஞ்சாவும் வருஷநாட்டில் மொத்த விற்பனைக்கு குவிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இங்கே கஞ்சா சாகுபடி குறைந்த நிலையில், கடத்தல் கும்பல் கோவை வனத்திற்குள் முகாமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கோவை வனத்தில் கஞ்சாவை தடுக்க போலீசார் கடந்த 5 ஆண்டாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. போலீசாரின் மாமூல் நடவடிக்கையால் பள்ளிக்கூட வாசல்களில் கூட கஞ்சா பொட்டலம் விற்பனை செய்யப்படும் அளவிற்கு நிலைமை உருவாகியுள்ளது.

கோவை நகர், புறநகரில் தினமும் 300 முதல் 400 கிலோ அளவிற்கு கஞ்சா வியாபாரம் நடக்கிறது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் உள்ளனர். இந்த கும்பலை தடுக்க, கட்டுப்படுத்த குறைந்தபட்ச முயற்சியைகூட வனத்துறையினர், போதை பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொள்ளவில்லை. மாவோயிஸ்ட், நக்சல் நடமாட்டத்தால் இவர்கள் வனத்திற்குள் சோதனைக்கு செல்ல மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாடகிரி கஞ்சாதான் சப்ளை

போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கேட்டபோது, ‘‘உள்ளூரில் கஞ்சா சாகுபடி கிடையாது. மாநில அளவில் ஆந்திரா மாநிலம் பாடகிரி வனத்தின் கஞ்சாதான் சப்ளையாகிறது. இந்த கஞ்சா ரயிலில் வருகிறது. சிலர் பார்சலில் அனுப்புகிறார்கள். இதை மொத்தமாக தடுக்க எங்களிடம் போதுமான போலீசார் கிடையாது. உள்ளூர் போலீசார் உதவினால் தடுக்க முடியும். வனத்தில் சோதனை நடத்தவும் எங்களிடம் ஆள் பலம் கிடையாது. உள்ளூரில் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறோம். இவ்வளவுதான் எங்களால் செய்ய முடியும்’’ என்றனர்.

Related Stories: