குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: வன்முறைக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் கூற்றை ஆராய்ந்து பார்க்கும்போது வன்முறைக்கு காரணம் அரசாங்கமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பாஜவாக இருக்கவேண்டும். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாதி, சமய வேறுபாடின்றி போராடி வரும் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் தமிழக அரசு காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்துவது கடும் கண்டனத்துக்குரியது. இந்தநிலை தொடர்ந்தால், அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகம் நாள்தோறும் போராட்டக் களத்தைச் சந்திக்க வேண்டியது இருக்கும்.

சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: அமைதியாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய இந்த அராஜக தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: ஜனநாயக நாட்டில் எதிர்ப்புகளைப் பதிவு செய்ய அமைதி வழியில் இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் மீது ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தேவையில்லாமல் தேன்கூட்டில் கைவைப்பது போல் ஆகிவிடும். சென்னை வண்ணாரப்பேட்டையில் நிகழ்ந்தது போன்ற சம்பவங்கள் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாது. இப்பிரச்னையில் ஜனநாயக வழியில், அமைதியாக போராடும் இஸ்லாமியப் பெருமக்கள் உள்ளிட்டோருக்கு எப்போதும் அமமுக களத்தில் துணையாக நிற்கும்.

விசிக தலைவர் திருமாவளவன்: பெண்களின் போராட்டம் வெற்றிகரமாக நடப்பதை சகித்துக்கொள்ளமுடியாமல் அவர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி இருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது மட்டுமின்றி அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் என்று தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி தலைவர்):போராட்டக்காரர்கள் மீது சென்னை மாநகர போலீசார் கொடூரமான  தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இந்த தாக்குதலில் பெண்களும் காயமடைந்து இருக்கின்றார்கள். போராட்டத்தில் பங்கு கொண்ட தலைவர்கள் உள்ளிட்ட பலரை அடித்து இழுத்து காவல் துறையினர் கைது செய்தனர். இந்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். இதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாக தமிழக முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிமுன் அன்சாரி எம்எல்ஏ (மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர்):தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் வீதியில் இறங்கி போராடுவேன் என்று சொன்ன ரஜினி, தற்போது பல்வேறு இடங்களில் நடந்துவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரஜினிகாந்த் களத்தில் வந்து போராட வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய போராட்டம்தான் இது. மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.

Related Stories: