அவகாசம் கோரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மனு தள்ளுபடி: 1.47 லட்சம் கோடி செலுத்த கெடு: சாதாரண அதிகாரி நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிப்பதா என நீதிபதி கொந்தளிப்பு

புதுடெல்லி: ஏஜிஆர் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கோரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தீர்ப்பை தடை செய்யும் விதமாக உத்தரவு பிறப்பித்த அரசு அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அடுத்த மாதம் 17ம் தேதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் கட்டணத்தை செலுத்த உத்தரவிட்டனர்.  புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதை எதிர்த்து பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் தள்ளுபடி செய்தது. அதை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து கடந்த ஜனவரி 15ம் தேதி தள்ளுபடி செய்தது. நிலுவையை வட்டியுடன் சேர்த்து மொத்தம் 1.47 லட்சத்தை வரும் ஜனவரி 23ம் தேதிக்குள் மத்திய அரசிடம் செலுத்த உத்தரவிட்டது.

Advertising
Advertising

  இதையடுத்து, கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கோரி வோடபோன், ஏர்டெல், டாடா டெலசர்வீசஸ் நிறுவனங்கள் மனு செய்தன. இது, உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தீர்ப்பில் நீதிபதி அருண் மிஸ்ரா கூறியதாவது: கட்டணம் செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஒரு சாதாரண அதிகாரி, அட்டர்னி ஜெனரல் கே.வேணுகோபால் மற்றும் பிற சட்ட துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பணத்தை செலுத்த நாங்கள் நிர்பந்திக்கவில்லை. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என  குறிப்பிட்டுள்ளார்.  ஒரு சாதாரண அதிகாரி உச்ச நீதிமன்ற தீர்ப்பை தடை செய்யும் விதமாக இவ்வாறு செய்யலாமா? இந்த முட்டாள் தனமான வேலையை யார் செய்தது என தெரியவில்லை. மிக வேதனையாக இருக்கிறது.

 இந்த நாட்டில் சட்டம் என்பதே இல்லையா? இந்த நீதித்துறையில், இந்த நாட்டில் பணியாற்ற முடியாது என கருதுகிறேன். நான் இதுபோன்று எப்போதும் கோபப்படுவதில்லை. ஆனால், நீதித்துறையில் மற்றும் இந்த நாட்டில் எப்படி பணியாற்றுவது என்று தெரியவில்லை என்றார்.  அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல், ‘அந்த அதிகாரி அப்படி செய்திருக்கக்கூடாது’ எனக்கூறி மன்னிப்பு ேகாரினார். அப்போது நீதிபதி, சொலிசிட்டர் ஜெனரல் என்ற முறையில், அந்த அதிகாரியிடம் உத்தரவை திரும்பப்பெற நீங்கள் கூறவில்லையா? இதை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. இப்படி ஒரு செயல்பாடுகளுக்கு நடுவே எங்களால் பணியாற்ற முடியாது. நான்  சொல்வதை இம்மி அளவு கூட நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. உங்களுடைய சாதாரண  அதிகாரி கோர்ட் உத்தரவை தடை செய்திருக்கிறார்.

அவர், உச்ச நீதிமன்றத்துக்கு  மேலானவரா? அந்த அதிகாரி மற்றும் நிறுவனங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர  இருக்கிறோம். மனுவை தள்ளுபடி செய்தும் ஒரு பைசா கூட  நிறுவனங்கள் கட்டவில்லை. வழக்கை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்தி  வைக்கிறோம். அதற்குள் கட்டணம் செலுத்த  தவறினால், நிறுவன இயக்குநர்கள் ஆஜராக வேண்டும் என  உத்தரவிட்டனர்.

நள்ளிரவு வரைதான் அவகாசம் :தொலைத்தொடர்பு துறை திடீர் கெடு

ஏஜிஆர் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கோரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மார்ச் 17க்குள் கட்டணத்தை செலுத்த உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, தொலைத்தொடர்பு துறை ஒரு திடீர் உத்தரவை பிறப்பித்தது. அதில், ஏஜிஆர் கட்டண பாக்கியை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை (நேற்று) நள்ளிரவு 11.59க்குள் செலுத்த வேண்டும் என கெடு விதித்து உத்தரவிட்டது.

வோடபோன்- ஐடியா கதி என்ன?

ஏஜிஆர் கட்டணத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது வோடபோன்தான். வோடபோன் 50,000 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும். ஏர்டெல் 35,000 கோடி, டாடா டெலசர்வீசஸ் ரூ.13,823 கோடி செலுத்த வேண்டும். வோடபோன்-ஐடியா நிறுவனம் கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 6,439 கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டில் இந்த இழப்பு 5,005 கோடி. மத்திய அரசு உதவவில்லை என்றால் நிறுவனத்தை மூட வேண்டியதுதான் என குமாரமங்கலம் பிர்லா ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டதால், வோடபோன் நிறுவனம் தவித்து வருகிறது.

Related Stories: