ஜெயலலிதாவை விமர்சித்த வழக்கில் டிராபிக் ராமசாமிக்கு பிடிவாரன்ட்

சென்னை: ஜெயலலிதாவை விமர்சனம் செய்தது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் டிராபிக் ராமசாமிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2015ம் ஆண்டு சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த மழையில் இரண்டு மாவட்டங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இந்தநிலையில், வெள்ளத்தில் அவதியடைந்த மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்தும் நிவாரண உதவிகள் வந்தன.  இந்தநிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த நிவாரண பொருட்களை அதிமுகவினர் பறித்து கொள்வதாக, புகார் கூறி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பேசினார். இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக கூறி டிராபிக் ராமசாமிக்கு எதிராக சென்னை மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் கடந்த 2016ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாராணைக்கு வந்தபோது, நீதிமன்றம் டிராபிக் ராமசாமிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்திருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும்  நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிராபிக் ராமசாமிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து நீண்டநாட்கள் ஆகிவிட்டதால். மீண்டும் புதிதாக வாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி டிராபிக் ராமசாமிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டு பிறப்பித்து மீண்டும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 17ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Related Stories: