திருவள்ளூர், தூத்துக்குடியில் தொழிற்பூங்கா அமைக்க அனுமதி தராமல் மத்திய அரசு இழுத்தடிப்பு: தமிழக அரசுக்கு பின்னடைவு

சென்னை: திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடியில் தொழிற்பூங்கா அமைப்பதற்கு ஒப்புதல் தராமல் மத்திய அரசு இழுத்தடிப்பதால் தமிழக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொழிற்பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடம், சுற்றுச்சூழலுக்கு உகந்தது இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் காரணம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மணலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் தெற்கு வீரபாண்டியபுரம் ஆகிய இடங்களில் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு அதன் பிறகு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெற தமிழக அரசு விண்ணப்பித்தது.

ஆனால், இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் தர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் காலம் தாழ்த்தி வருகிறது. மணலூரில் மருந்து பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்கள் தொழிற்சாலைகளுடன் கூடிய பூங்கா ஒன்றை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கடற்பரப்பு அருகே நிலம் ஒதுக்கப்பட்டதாலும், செம்மன் பூமியான மணலூரில் தொழிற்பூங்கா அமைக்க அனுமதி தர முடியாது என்று மத்திய சுற்றுச்சூல் அமைச்சகம் தெரிவித்துவிட்டது. அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் தெற்கு வீரபாண்டியபுரத்தில் ஒதுக்கப்பட்ட நிலமும் தொழிற்பூங்கா அமைப்பதற்கு ஏதுவாக இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது. தொழிற்பூங்கா அமைக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 இடங்களையும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்துள்ளது தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Related Stories: