பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் உயிரை பணயம் வைத்து பெயின்டிங் பணி

ராமேஸ்வரம்: பாம்பன் கடல் பாலத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஆபத்தான முறையில், பெயின்ட் அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த பராமரிப்பு பணிகளை தொடர்ந்து, தற்போது பாலத்திற்கு பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாலத்தின் மையப்பகுதியில் கப்பல் செல்லும்போது திறந்து வழி விடும் ஷெர்ஜர் தூக்குப்பாலத்திற்கு பெயின்ட் அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கப்பல் செல்லும்போது மட்டும் திறக்கப்படும் ஷெர்ஜர் தூக்குப்பாலத்தில் மற்ற நேரங்களில் ரயில் செல்வதற்கு ஏற்ப பாலம் மூடப்பட்டு தண்டவாளமும் இணைந்து இருக்கும். இதனால் பாலத்தில் ரயில்கள் சென்று வருவதில் எவ்வித தடையும் இல்லாத வகையில் ஊழியர்கள் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஷெர்ஜர் தூக்குப்பாலத்திலுள்ள 30 அடி உயரம் ெகாண்ட இரும்பு கர்டர்களில் ஊழியர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் பெயின்ட் அடித்து வருகின்றனர். சாதாரணமாக உயரமான இடத்தில் பெயின்ட் அடிக்கும் ஊழியர்களுக்கு வசதியாக தற்காலிக லிப்ட் அல்லது சாரம் கட்டப்பட்டு பலகைகள் போட்டு அதன் மீது நின்று வேலை செய்வார்கள். அல்லது இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு வேலை பார்ப்பார்கள். ஆனால் பாம்பன் பாலத்தில் பெயின்ட் அடிக்கும் ஊழியர்கள் உயரமான கர்டர்கள் மீது, எவ்வித பிடிமானமுமின்றி பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலை செய்யும்போது கால் இடறியோ, ரயில் செல்லும் அதிர்வினால் தவறி கீழே விழுந்தால் கீழே செல்லும் ரயிலில் விழும் அபாயம் உள்ளது. ரயில் செல்லாத நேரத்தில் விழுந்தாலும் பாலத்திற்கு கீழே கால்வாயில் அதிக நீரோட்டத்துடன் செல்லும் கடலில் விழுந்து உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

இதுபோன்ற பணிகளில் டெண்டர் எடுக்கும் தனியார் நிறுவன நபர்களே வேலை செய்வதால், இவர்களின் பாதுகாப்பு குறித்து ரயில்வே நிர்வாகமும் கவலை கொள்வதில்லை.  கடலில் அமைந்துள்ள பாலத்தில் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் பணியாற்றும் இந்த ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்., பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஊழியர்களை வேலைவாங்கும் நிறுவனங்களுக்கு இதுபோன்ற பணிகளை வழங்க தடை விதிக்கவேண்டும் என பொதுமக்களும், பேரிடர் மேலாண்மை குழுவினரும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: