டிஎன்பிஎஸ்சி முறைகேடு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

மதுரை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து ஐகோர்ட் கண்காணிப்பில், சிபிஐ விசாரணை நடத்தக் கோரிய மனு, ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பெரும்பாலான அரசுப்பணிகளுக்கான நியமனங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமே நடக்கிறது. இதற்கான எழுத்துத்தேர்வுகள் மாநிலம் முழுவதும்  பள்ளிகளில் நடக்கிறது. தேர்வு பணிகள், வருவாய்த்துறையினர், கல்வித்துறையினர் மற்றும் போலீசாரைக் கொண்டே நடத்தப்படுகிறது. இதனால்தான் சுலபமாக விடைத்தாளை திருத்தி மோசடி செய்துள்ளனர்.

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆனால்,குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளிலும், விஏஓ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது. எனவே, கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்யவும், குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்கவும், அதை நீதிமன்றம் கண்காணிக்கவும், டிஎன்பிஎஸ்சி நியமன நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி, ‘‘டிஎன்பிஎஸ்சி தன்னாட்சி அமைப்பு. இதன் தேர்வு நடைமுறைகளை மாற்ற வேண்டுமென உத்தரவிட முடியாது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரர் தரப்பு வாதத்திற்கு போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தேவைப்பட்டால் உரிய ஆவணங்களுடன் மனுதாரர் தனியாக மனு செய்து கொள்ளலாம்’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: