ராமேஸ்வரம் கோயிலில் நாளை சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: பிப்.22ல் தேரோட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் சிவராத்திரி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிப்.21ம் தேதி மகா சிவராத்திரி உற்சவம் நடைபெறும். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மகா சிவராத்திரி திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு நாளை அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடைதிறந்து 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். 6 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் சன்னதியில் காலபூஜைகள் நடைபெற்று பகல் 10 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறும்.

இதையொட்டி நாளை பகல் 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி சன்னதி எதிரிலுள்ள நந்திகேசுவரர் மண்டபத்திற்கு எழுந்தருளல் நடைபெறும். பகல் 10 மணிக்கு மேல் இங்குள்ள தங்க கொடிமரத்தில் கோயில் குருக்களால் கொடியேற்றப்பட்டு மகா சிவராத்திரி திருவிழா துவங்கப்படுகிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருள விதியுலா நடைபெறும்.

மகா சிவராத்திரி முக்கிய திருவிழா நாட்களான பிப்.16ம் தேதி சுவாமி, அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல், 21ம் தேதி மகா சிவராத்திரி உற்சவம் வெள்ளித் தோரட்டம், 22ம் தேதி சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடைபெறும். பிப்.23ல் மாசி அமாவாசையை முன்னிட்டு அன்று மதியம் ஒரு மணிக்கு மேல் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்க தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நாள் தோறும் இரவு 7 மணிக்கு மேல் கோயில் தெற்கு நந்தவன திருக்கல்யாண மண்ட்ப அரங்கில் பக்தி இன்னிசை, பரதநாட்டியம், நாட்டிய நாடகம், ஆன்மிக சொற்பொழிவு, பட்டமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. கோயில் இணை கமிஷனர் கல்யாணி மற்றும் கோயில் பணியாளர்கள் சிவாரத்திரி திருவிழாவிற்கான பணிகளை செய்து வருகின்றனர்.

Related Stories: