கேரள அரசு லாட்டரியில் கூலி தொழிலாளிக்கு ரூ.12 கோடி பரிசு: கடனில் வீடு பறிபோகும் நிலையில் அதிர்ஷ்டம்

திருவனந்தபுரம்: கேரள அரசு லாட்டரியில் கண்ணூரை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு ரூ.12 கோடி பரிசு கிடைத்துள்ளது. கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கான முதல் பரிசு ரூ.12 கோடி. நேற்று முன்தினம் நடந்த குலுக்கலில் கண்ணூர் அருகே உள்ள மட்டனூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி ராஜன் (63) வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இவருக்கு ரஜனி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். இவரது முதல் மகளுக்கு கடந்த 4 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. அதற்காக வீட்டை அடமானம் வைத்து ஒரு வங்கியில் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார்.

இதேபோல் வீடு கட்டுவதற்காக 4 வங்கிகளில் ரூ.7 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், மகள் திருமணத்துக்கு வாங்கிய கடனுக்கான வட்டி தொகையை திரும்ப செலுத்தாததால் வங்கியில் ஜப்தி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் வங்கிக்கு சென்றவர் ஜப்தி நோட்டீசை வாங்கினார். வரும் வழியில் கேரள அரசின் லாட்டரி சீட்டை வாங்கி வந்துள்ளார். அந்த லாட்டரிக்குதான் அவருக்கு ரூ.12 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதன் மூலம், ஒரேநாளில் அவர் கோடீஸ்வரனாகி இருக்கிறார். குடியிருக்கும் வீடே கடனில் கைவிட்டு போய்விடும் என்ற நிலையில், இந்த பரிசு விழுந்திருப்பதால் அவருடைய குடும்பமே பெரும் மகிழ்ச்சியில் திண்டாடி வருகிறது.

Related Stories: