காஞ்சிபுர மாவட்டத்தில் கடந்தாண்டில் மட்டும் 950 பேர் தற்கொலை: அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுர மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 950 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சிக்குரிய புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. இதில் திருமணமான இளம்பெண்கள் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது. ஒருங்கிணைந்த காஞ்சிரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2017ம் ஆண்டு 726 பேரும், 2018ம் ஆண்டு 845 பேரும், 2019ம் ஆண்டு 950 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் குறிப்பாக 50க்கும் அதிகமானோர் திருமணமான இளம் பெண்கள் ஆவர். 2019ம் ஆண்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 3 பேர் தற்கொலை செய்து கொண்டு உழிரிழந்துள்ளதாக அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அளவில் பார்க்கும் போது கடந்தாண்டு மட்டும் 13 ஆயிரத்து 896 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 6.7 சதவிகித பேர் ஒருங்கிணைந்த காஞ்சிபுர மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களில் ஆண்கள் 9 ஆயிரத்து 179 பேர், பெண்கள் 4 ஆயிரத்து 715 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர். குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 400 பேர் என்கிறது சமூக நலத்துறை. ஆண்களின் குடிப்பழக்கம், மாமியார் கொடுமை, வரதட்சணை, உறவு முறைகளில் ஏற்படும் தோல்வி போன்றவையே பெண்கள் தற்கொலைக்கான முக்கிய காரணங்களாக இருப்பதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுர மாவட்டத்தில் தற்கொலை விகிதம் அதிகமாக இருப்பதை அடுத்து அங்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சமூக நலத்துறை சார்பில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்கொலை எண்ணங்கள் வரும் போது 104 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து ஆலோசனை பெறலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

Related Stories: