தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஜூன் 30ம் தேதிக்குள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கான தேர்தலை ஜூன் 30ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏற்கனவே நடிகர் விஷால் தலைவராக இருந்தார். இந்த நிலையில் அதற்கான பதவிக்காலம் முடிந்த உடனே தமிழக அரசு அதற்கான சிறப்பு அதிகாரியை நியமித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் இதில் மற்றொரு வழக்காக சங்கத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்தக்கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை என்பது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை பொறுத்தவரையில், இன்று நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஜூன் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் தேர்தலை நடத்தி முடித்து ஜூலை 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தயாரிப்பாளர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது எதிர்த்து விஷால் தொடர்ந்த வழக்கை அவரே திரும்ப பெற்றுக்கொண்டதால் இந்த வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தகட்டமாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்று அதற்கான அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: