வரும் 24, 25ம் தேதிகளில் 2 நாள் பயணம் முதல் முறையாக இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்: வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வரும் 24ம் தேதி  இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக முதல் முறையாக வருகிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்தாண்டு செப்டம்பரில் நடைபெற்ற 74வது ஐநா பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்த அவர், இந்தியா வரும்படி அழைப்பு விடுத்தார். இதை டிரம்ப் ஏற்றார். இந்நிலையில், டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் 2 நாள் பயணமாக வரும் 24ம் தேதி இந்தியா வருகிறார். இதை அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஸ்டெபானி கிரிஷாம் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலனியா உடன் பிப்ரவரி 24, 25 தேதிகளில் இந்தியாவில் பயணம் செய்கிறார்.

கடந்த வாரம் இறுதியில், தொலைபேசியில் பேசிய அதிபர் டிரம்ப்பும், இந்திய பிரதமர் மோடியும், இந்த பயணம் இரு நாடுகள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று கூறிக் கொண்டனர். இந்த பயணத்தின் போது, அதிபர் டிரம்ப், மெலனியா ஆகியோர் டெல்லி மற்றும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் பயணம் செய்கின்றனர். சுதந்திரத்துக்காக போராடிய மகாத்மா காந்தியின் வாழ்க்கையிலும் அகமதாபாத் முக்கிய பங்காற்றி உள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு டிரம்ப் இந்தியா வருவது இதுவே முதல் முறை.

அனைத்து தரப்பிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி

டிரம்ப்பின் இந்திய வருகை குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `டிரம்ப்பின் இந்த வருகை, இருநாட்டு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் அறிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமையும். மேலும், இருதரப்பு உறவையும் வலுப்படுத்தும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: