10க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட கட்டுமான நிறுவனங்களை போனஸ் சட்டத்தின் கீழ் கொண்டுவர முடிவு: சங்கங்கள், பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

சென்னை: பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட கட்டுமான நிறுவனங்களை போனஸ் சட்டத்தின் கீழ் கொண்டுவர தொழிலாளர் நலத்துறை முடிவு செய்துள்ளது.  இது தொடர்பாக கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், செயல்பட்டு வருகிறது. இதில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். கட்டுமான நிறுவனங்கள் தங்களது பணியின் மொத்த மதிப்பீட்டில் 1 சதவீத தொகையை கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு மேல் வரியாக (செஸ் வரியாக ) செலுத்த வேண்டும். இந்த நிதியை கொண்டு நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதன்படி விபத்து மரணத்திற்கு 1 லட்சம், இயற்கை மரணத்திற்கு 20,000, ஈமச் சடங்கு செய்ய 5000, கல்வி உதவித் தொகையாக 1000 முதல் 8000 வரை, ஓய்வூதியமாக ₹1000 உள்ளிட்ட நல திட்டஉதவிகள் வழங்கப்படுகிறது. இதைத் தவிர்த்து கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டும் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தால்  5 லட்சமும், குடும்ப ஓய்வூதியமாக 500 ம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கும் விதமாக அந்த நிறுவனங்களை போனஸ் சட்டத்தின் கீழ் ெகாண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் (பணி முறைப்படுத்துதல் மற்றும் பணிநிலைமைகள்) சட்டம் 1996ல் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்தும் கட்டிடம் மற்றும் இதர கட்டுமான நிறுவனங்கள் சட்டப்படி தங்களது பணியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும். இந்த சட்டத் திருத்தம் தொடர்பான கருத்துகளை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் 2 மாதத்திற்குள் அனுப்பலாம்.  கருத்துகளை இயக்குனர், சுகாதாரம் மற்றும் தொழிலக பாதுகாப்பு, 47/1 திரு.வி.க. தொழிற்பேட்ை, கிண்டி, சென்னை - 600 032 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Related Stories: