குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கவர்னர் கிரண்பேடி தடை

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவை சேர்ந்த நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் கவர்னர் கிரண்பேடியை சந்தித்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று காலை கவர்னரிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் கவர்னர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறிருப்பதாவது: மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நியமன எம்எல்ஏக்கள் என்னை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் புதுச்சேரியை ஆளும் அரசு வரும் 12ம் தேதி சட்டசபையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் குடியுரிமை சட்டம் தொடர்பாக விவாதம், தீர்மானம் நிறைவேற்ற சபாநாயகர் அனுமதிக்கக்கூடாது.

இது இந்திய அரசின் யூனியன் பிரதேச சட்டப்படி சட்டப்பேரவை அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல. இது தொடர்பாக சில விவரங்களை கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசாணையாகவும் குடியரசுத்தலைவர் ஒப்புதலுடனும் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இச்சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டவுடன், இது புதுச்சேரிக்கும் பொருந்தும். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் எவ்வித அடிப்படையிலும், இவ்விஷயத்தில் கேள்வி எழுப்ப இயலாது. சட்டப்பேரவையின் அதிகாரத்தின் அடிப்படையில், சட்டத்திருத்தம் தொடர்பாக விவாதம் உள்ளிட்டவை செய்வது நாடாளுமன்றத்துக்கு எதிரானது. அத்துடன் உச்சநீதிமன்றத்தின் கீழ் இவ்விஷயம் உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை விதிகளின்படி, நாட்டின் எப்பகுதியிலும் உள்ள நீதிமன்றத்தில் கீழ் இருக்கும் விஷயத்தை தீர்மானமாகவோ, விவாதிக்கவோ அனுமதிக்க இயலாது என்று உள்ளது. எனவே இதன்மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: