18 தொகுதிக்கான லிஸ்ட் கொடுத்து பல நாளாச்சு… இபிஎஸ்சிடம் பொங்கிய அன்புமணி; தேர்தல் தேதியே அறிவிக்க போறாங்க… எப்போ கன்பார்ம் பண்ணுவீங்க

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜ அதிக தொகுதிகளை கேட்டு வருவதால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த கூட்டணியில் இணைந்து உள்ள அன்புமணி பாமகவுக்கு 18 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட்டு என்று உடன்படிக்கை போடப்பட்டதாம். இந்த தொகுதிகள் அனைத்தும் அதிமுகவே ஒதுக்க வேண்டும் என்று பாஜ உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அதிமுக கொடுத்த ராஜ்யசபா சீட்டில் அன்புமணி மீண்டும் எம்பியாக தேர்வாகியுள்ளார். அதேபோல், தொகுதி பங்கீடு தொடர்பாக அன்புமணி கேட்ட தொகுதிக்கான பட்டியலை கடந்த 20 நாட்களுக்கு முன்பே அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்சிடம் வழங்கப்பட்டிருக்காம்.

ஆனால் இதுவரை அந்த தொகுதிக்கான பட்டியலை இறுதிசெய்யாமல் அதிமுக தலைமை அமைதி காத்து வருவதால் அன்புமணி தரப்பு அப்செட்டில் இருக்கிறார்களாம். கடந்த 11ம் தேதி திருச்சியில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி, இபிஎஸ்சிடம் எங்களுக்கான தொகுதியை இறுதிசெய்து கொடுங்க என்று வலியுறுத்தியிருக்கிறார். ஏற்கனவே கட்சியில் உட்கட்சி(தந்தை-மகன்) பிரச்னை ஒருபக்கம் சென்றுகொண்டிருப்பதால் தேர்தல் தேதி அறிவித்ததும் தொகுதியில் வேலை செய்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இதனை இறுதிசெய்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி தரப்பில் கூறுகையில், ‘‘வெற்றிவாய்ப்புள்ள வடமாவட்டங்களில்தான் தொகுதிகளை கேட்டிருக்கிறோம். சேலம் மாவட்டத்தில் மேற்கு தொகுதி, மேட்டூர் அல்லது ஓமலூர், தர்மபுரி, சிட்டிங் தொகுதியான பெண்ணாகரம், கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, விருத்தாசலம், மயிலாடுதுறை, பர்கூர், ஆற்காடு, வேலூர், சோளிங்கர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர், போளூர் அல்லது செய்யூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட தொகுதிகளை கட்டாயம் எங்களுக்கு ஒதுக்கக்கோரி பட்டியலை கொடுத்திருக்கிறோம். ஆனால் பாஜவுடன் தொகுதி பங்கீடு முடிந்தால் மட்டுமே பாமகவிற்கு இறுதி செய்ய முடியும் என்கின்றனர்.

பாமகவில் ஒருபக்கம் ராமதாஸ் தரப்பு நீதிமன்றம் சென்றிருப்பதால் எங்களுக்கு பலவகையில் சிக்கல் இருக்கிறது. எனவே, தொகுதிகளை இறுதிசெய்யுமாறு அன்புமணி அதிமுக தலைமையை வலியுறுத்தியுள்ளார். வரும் வாரத்தில் தொகுதி இறுதிசெய்யப்படும் என்று உறுதியளித்திருப்பதாக கூறியுள்ளனர்’’ என்றனர். பாமக வழங்கிய தொகுதி பட்டியலில் அதிமுக விஐபி தொகுதிகளும் வருவதால் அதனை இறுதிசெய்வதிலும் சில சிக்கல்கள் இருப்பதாகவும் அதிமுக வட்டாரத்தில் கூறுகின்றனர். தேர்தல் தேதி அறிவித்து வேட்பு மனுதாக்கல் தொடங்கினால்தான் அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதி இறுதி செய்யப்படும் என்கின்றனர்.

புதுச்சேரியில் 2வது கொடுங்க… பாஜவிடம் கெஞ்சும் அன்புமணி
தமிழகத்தை தொடர்ந்து அன்புமணி தரப்பு பாமக, புதுச்சேரியில் ஆளுங்கட்சியான என்ஆர், பாஜ கூட்டணியில் 3 தொகுதியை கொடுத்தாக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறதாம். இதற்காக அன்புமணி தலைமையில் அமைத்த தமிழக பாமக சட்டமன்ற கொறடா, மயிலம் பாமக எம்எல்ஏ சிவக்குமார் தலைமையில் இணைபொதுச்செயலாளர் வைத்தி உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு அங்குள்ள பாஜ, என்ஆர் கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருகிறதாம். பாமகவிற்கு 5 தொகுதிகள் கேட்ட நிலையில் 3 தொகுதிகளாக குறைத்து கடைசியில் 2வது கொடுங்க என்று பாஜ தலைமையிடத்தில் கெஞ்சி வருகிறதாம்.

தமாகாவுக்கு 12 சீட் வேணுமாம்! ஆனா சைக்கிள ஓட்டதான் ஆளில்ல…
ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான விடியல் சேகர் நேற்று அளித்த பேட்டி: அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் 12 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய கேட்டுள்ளோம். ஒரு வாரத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என நம்புகிறோம். இந்த தேர்தலில் தமாகாவின் சின்னமான சைக்கிள் சின்னத்தில் தனித்து தான் போட்டியிட வேண்டும் என்பது எங்களது நோக்கம். அதனால், எங்களது தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் எங்களது சைக்கிள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். எங்கள் கூட்டணி கட்சிகளிடம் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாக வலியுறுத்துவோம். எங்களது கூட்டணி வெற்றி பெற்றால் அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி இல்லை. இவ்வாறு அவர் கூறினார். தமாகாவில் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே நிர்வாகிகள் உள்ளனர். இதில் தேர்தலில் போட்டியிடும் வகையில் தயாராக இருப்பது ஒன்னு, ரெண்டு பேருதான். ஆனால், 12 சீட் கேட்டு இருக்கோம்ன்னு விடியல் சேகர் சொல்றாரு…ஆனால், ஒன்னு, ரெண்டுக்கே சைக்கிள் நல்ல ஓட்ட ஆளில்ல… இதுல 12 சைக்கிள ஓட்ட ஜி.கே.வாசன் எங்கிருந்து ஆள பிடிக்க போறாருனு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Related Stories: