ஸ்கேட்டிங் மூலம் விதைப்பந்து தூவி விழிப்புணர்வு

கம்பம்: கம்பம் அருகே ஸ்கேட்டிங்கில் பயணம் செய்தபடி விதைப்பந்துகளை தூவி பொதுமக்களிடையே, மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்களுக்கு புவி வெப்பமயமாதல் குறித்தும், மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியிலிருந்து கம்பம்மெட்டு அடிவாரம் வரை ஸ்கேட்டிங்கில்  பயணம் செய்தபடி 20,000 விதைப்பந்துகள் தூவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கம்பம் நாகமணி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்ஆர் இன்டர்நேஷனல் பள்ளி, எஸ்பிஎம் இன்டர்நேஷனல் பள்ளி, நாலந்தா இன்னோவேஷன் பள்ளி, புதுப்பட்டி பேர்லேண்ட் பவுண்டேசன் பள்ளி, உத்தமபாளையம் விகாசா வித்யாலயா, அணக்கரை மான் போர்ட் ஸ்கூல் உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த 16 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

காமயகவுண்டன்பட்டி பெரியகருப்பசாமி கோயில் பகுதியிலிருந்து துவங்கிய இந்த நிகழ்ச்சிக்கு ஏகலைவன் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் நாகராஜ் தலைமை வகித்தார். உத்தமபாளையம் டிஎஸ்பி சின்னக்கண்ணு கொடியசைத்து துவக்கி வைத்தார். கம்பம்மெட்டு அடிவாரம் வரை நடந்த இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, சாலையின் இருபுறங்களிலும் விதைப்பந்துகளை தூவியபடி சென்றனர். இந்நிகழ்ச்சியில் ராயப்பன்பட்டி இன்ஸ்பெக்டர்(பொ) சிலைமணி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி, கேகேபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிராஜுதீன், டாக்டர் முருகானந்தம், ஸ்கேட்டிங் அகாடமி பாண்டி மகாதேவன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: