மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம்: இன்று காலை நடந்தது

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மாசி மண்டல திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 48 நாட்கள் நடைபெறும் இந்த மாசி மண்டல விழாவில், அறுவடை காலம் முடிந்த பின்னர், மாசி மாதத்தில் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், கட்டுச்சோறு கட்டிக்கொண்டு குடும்பம், குடும்பமாக மாட்டுவண்டிகளில் பயணம் செய்து, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி, அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.

இந்த திருவிழா 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலம் நடைபெறும். மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த ஆண்டு மாசி திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9.15 மணி முதல் 10.45 மணிக்குள் கோயிலில் சுவாமி சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம்  நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

Related Stories: