பயிற்சியின் போது சரமாரி துப்பாக்கிச்சூடு ஆப்கன் வீரர் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் பலி: 6 பேர் காயம்

காபூல்: ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதோடு, மேலும் 6 வீரர்கள் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்களை திரும்ப பெறும் நடவடிக்கையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக உள்ளார். இந்நிலையில், ஆப்கன் வீரர் அமெரிக்க வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நங்கர்ஹர் மாகாணத்தில் ஷெர்சாத் மாவட்டத்தில் உள்ள தளத்தில் அமெரிக்க - ஆப்கன் படை வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஆப்கன் வீரர் ஒருவர் திடீரென இருநாட்டு வீரர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் இரண்டு அமெரிக்க வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 6 வீரர்கள் காயமடைந்தனர். இதை அமெரிக்க ராணுவமும் உறுதி செய்துள்ளது. காயம் அடைந்துள்ள அனைவரும் அமெரிக்க வீரர்களா அல்லது ஆப்கானிஸ்தான் வீரர்களும் அதில் இருக்கிறார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை.

இது பற்றி அமெரிக்க படையின் ஆப்கன் செய்தி தொடர்பாளர் சன்னி லெக்கெட் கூறுகையில், ஆப்கன் வீரர்கள் உடையை அணிந்திருந்த ஒருவர், இயந்திர துப்பாக்கி மூலமாக தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது, என்றார். இது தொடர்பாக மாகாண கவர்னர் ஷா மகமூத் மியாகில் வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்றில், ‘இந்த தாக்குதல் ஊடுருவல்காரரால் நடத்தப்பட்டதா அல்லது தற்செயலாக நடந்த விபத்தா என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. இது இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் எதுவும் கிடையாது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.

Related Stories: