பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்: லட்சக்கணக்கானோர் குவிந்தனர்

பழநி: பழநி தைப்பூச திருவிழா தேரோட்டம் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க கோலாகலமாக நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  முத்திரை நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி தோளுக்கினியாளில் சண்முக நதிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் சுவாமி தேரேற்ற நிகழ்ச்சி நடந்தது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதையொட்டி  வள்ளி - தெய்வானை சமேதரராய் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பின்னர் பெரியநாயகி அம்மன் கோயில் முன்பிருந்து விநாயகர், வீரபாகு ஆகியோர் தனித்தனி தேர்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச தேர் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தைப்பூச தேரோட்டத்தையொட்டி நேற்று முன்தினம் முதலே பழநியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய துவங்கினர். நகர் முழுவதும் பச்சை, காவி உடை உடுத்திய மனித தலைகளே தென்பட்டன. பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவைக்காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற நேர்த்திக்கடன் செலுத்தினர். காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் போன்றவை காண்போரை பரவசமடைய செய்தது. வின்ச், ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனர்.

மலைக்கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் சன்னதி வீதியில் இருந்து வடக்கு கிரிவீதியில் உள்ள குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக யானைப்பாதை மூலமாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிவழிப்பாதையை பயன்படுத்தும் வகையிலும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வரும் பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒட்டன்சத்திரம் - பழநி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.  நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கலெக்டர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வடலூரில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம்

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகம் சார்பில் தைப்பூச விழா ஏற்பாடுகளை செய்திருந்தது. அதன்படி, நேற்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் ஏழு திரைகள் விலக்கி காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என பக்தி முழக்கமிட்டனர். அதை தொடர்ந்து 10, நண்பகல் 1, இரவு 7 மற்றும் 10 மணி அளவில் 7 திரைகளை நீக்கி 5 கால ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. இன்று (ஞாயிறு) காலை 5.30 மணி அளவில் 6-வது கால ஜோதி தரிசனம் நடந்தது. ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். இதைத்தொடர்ந்து நாளை பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார்  அருட்பெருஞ்ஜோதியாகிய மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகை திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.

Related Stories: