மாநிலங்களவையில் பிரதமர் உரையில் இருந்து ஒரு வார்த்தை நீக்கம்: வெங்கையா நாயுடு நடவடிக்கை

புதுடெல்லி: மாநிலங்களவையில் கடந்த 6ம் தேதி பிரதமர் ஆற்றிய உரையிலிருந்து ஒரு வார்த்தையை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு நீக்கினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பிரதமர் மோடி மாநிலங்களவையில் கடந்த 6ம் தேதி பேசினார். அப்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியின் முக்கியத்துவம் குறித்தும், அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை விமர்சித்தும் பேசினார். மாநிலங்களவை முடிந்தபின், அவை குறிப்புகளுக்கு பொருந்தாத வார்த்தைகளை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டுபிடித்து நீக்குவது வழக்கம். அதேபோல், பிரதமர் உரையில் இருந்த ஒரு வார்த்தையை அவர் நீக்கினார்.

அதேபோல், மோடி உரைக்கு பதில் அளித்து, எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசிய பேச்சிலிருந்தும் ஒரு வார்த்தையை வெங்கையா நாயுடு நீக்கினார். இது குறித்து மாநிலங்களவை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மாநிலங்களவையில் கடந்த 6ம் தேதி மாலை 6.20 மணியிலிருந்து 6.30 மணி வரை பேசப்பட்ட உரையில் இருந்து ஒரு பகுதியை நீக்க மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்,’ என கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அவைக் குறிப்புகளில், பிரதமர் உரையில் இருந்து வார்த்தைகள் நீக்கப்படுவது மிகவும் அரிதாக நடக்கும் சம்பவம். கடந்த 2018ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிபிரசாத் பற்றி பிரதமர் மோடி விமர்சித்த உரையிலிருந்து சில தரக்குறைவான வார்த்தைகள் நீக்கப்பட்டன.

Related Stories: