பசித்தால் புல்லை மட்டுமல்ல; பிளாஸ்டிக்கையும் தின்னும் புலி: உத்தரகாண்ட் சரணாலயத்தில் பரிதாபம்

டேராடூன்: பிளாஸ்டிக்குக்கு  தடை விதிக்கப்பட்டுள்ள கார்பெட் வனவிலங்கு சரணாலயத்தில் பிளாஸ்டிக்கை புலிகள் கடித்தும் தின்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் சரணாலய பகுதி, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு சமீபத்தில் வந்த சுற்றுலா பயணி ஒருவர் 3 புலிகள் பிளாஸ்டிக் பொருளை கடித்து தின்பது போன்ற புகைப்படத்தை எடுத்துள்ளார். அவற்றை கார்பெட் புலிகள் சரணாலய நிர்வாகிகளிடமும் ஒப்படைத்தார். தடை செய்யப்பட்ட பகுதியில் எப்படி பிளாஸ்டிக் வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது.

இச்சம்பவம் தொடர்பாக கார்பெட் சரணாலய துணை இயக்குனர் சந்திரசேகர ஜோஷி கூறுகையில், ‘‘சரணாலய பகுதியில் ஓடும் ராம் கங்கா ஆற்றில் இந்த பிளாஸ்டிக் பொருள் அடித்து வரப்பட்டு இருக்கலாம். சமோலி மாவட்டம், கைர்செய்ன் பகுதியில் இருந்து நைனிடால் மாவடடம் ராம்நகர் பகுதி வரை இந்த ஆறு பாய்கிறது. வழியில் பல கிராமங்கள் வழியே பாய்ந்து வரும் இந்த ஆற்றில் பிளாஸ்டிக்கை யாராவது வீசி இருக்கலாம். எனினும், பிளாஸ்டிக் தின்னும் புலியால் அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது,’’ என்றார். வனத்துறை அமைச்சர் ரவாத் கூறுகையில், ‘`புலிகள் பிளாஸ்டிக்கை தின்பது மிகவும் முக்கியமான பிரச்னை என்பதால், இது தொடர்பான அறிக்கைக்காக காத்திருக்கிறோம்,’’ என்றார்.

Related Stories: