போடோ அமைப்பை பின்பற்றி காஷ்மீர் தீவிரவாதிகள், மாவோக்கள் தேசிய நீரோட்டத்தில் சேர வேண்டும்: அசாமில் பிரதமர் மோடி அழைப்பு

கோக்ராஜர்: ‘‘போடோ அமைப்பை ஊக்க சக்தியாக பின்பற்றி, காஷ்மீர் தீவிரவாதிகளும், மாவோஸிட்டுகளும் தேசிய நீரோட்டத்தில் இணைய முன்வர வேண்டும்,’’ என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அசாம் மாநிலத்தில் வசிக்கும் போடோ பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் போடோலாந்து என்ற தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஎப்பி) அமைப்பு நீண்ட காலமாக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வந்தது. அந்த அமைப்புடன் மத்திய அரசு  நடத்திய பேச்சுவார்த்தையில் சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, மத்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் என்டிஎப்பி இடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கடந்த மாதம் 27ம் தேதி முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தத்தை கொண்டாடும் விதமாக, அசாம் மாநில அரசு சார்பில் பிரமாண்ட விழா நடத்தப்பட்டது. பின்னர், போடோ பழங்குடியின மக்கள் அதிகம் உள்ள கோக்ராஜர் நகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: போடோ ஒப்பந்தம் அனைத்து சமூகத்திற்கும், பிரிவினர்களுக்கும் கிடைத்திருக்கும் வெற்றி. இதில் தோற்றவர்கள் என்று யாருமில்லை.  வடகிழக்கில் உள்ள பயங்கரவாதிகளும், ஜம்மு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளும் மற்றும் மாவோயிஸ்ட்களும் போடோ கிளர்ச்சியாளர்களை ஊக்க சக்தியாக எடுத்துக் கொண்டு தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள முன்வர வேண்டும். போடோ மக்கள் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடி சிறப்பு நிதியை மத்திய அரசு வழங்கும்.

இது அவர்களின் கல்வி, அடிப்படை வசதி உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும். அசாமில் மீண்டும் வன்முறையை அனுமதிக்க நாங்கள் விட மாட்டோம். இனி வன்முறையில் எந்த உயிரும் பலியாகக் கூடாது. போடோ ஒப்பந்தத்தின் மூலம் அசாம் அமைதியில் புதிய விடியல் பிறந்துள்ளது. முந்தைய அரசும் வடகிழக்கு மாநிலங்களின் பிரச்னையை தீர்ப்பதில் கவனம் கொள்ளவில்லை. அதனால், ஜனநாயகத்தின் மீது அந்த மக்கள் நம்பிக்கை இழந்தனர். இப்போது, வடகிழக்கு மாநிலங்களின் கோரிக்கைகள் காது கொடுத்து கேட்கப்படுகிறது.

இம்மாநிலங்கள் தற்போது வளர்ச்சி இயந்திரங்களாக மாறி உள்ளன. குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து தங்கியவர்கள் மூலம் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவர்கள் சொல்வதைப் போல எந்த தீங்கும் ஏற்படாது. இவ்வாறு பிரதமர் பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாமில் தீவிர போராட்டம் நடைபெற்ற பிறகு, முதல் முறையாக பிரதமர் மோடி அங்கு சென்று பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘தாய்மார்களின் ஆசிஎன்னை காப்பாற்றும்’

‘பிரதமர் மோடியை இளைஞர்கள் தடி கொண்டு அடிக்கப் போகிறார்கள்’ என ராகுல் பேசியதை மறைமுகமாக சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, ‘‘சில தலைவர்கள் என்னை தடி கொண்டு அடிப்பதைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், நான் இந்திய தாய்மார்களின் ஆசியினால் காப்பாற்றப்படுவேன்,’’ என்றார்.

Related Stories: