குமரி மாவட்டத்தில் நகைக்கடைகளை குறிவைத்து மர்ம நபர்கள் கொள்ளை: 54 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் மாயம்

கன்னியாகுமரி:  குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 54 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் பூவன்கோடு பரமசிவம் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில்  நடந்துள்ளது. கொள்ளையடித்த மர்ம நபர்கள், மோப்பநாய் உதவியுடன் கண்டறியக்கூடாது என்பதற்காக, நகைக்கடை முழுவதும் மிளகாய் பொடியை தூவிச்சென்றுள்ளனர். தகவலறிந்து கடையை ஆய்வு செய்த திருவட்டாறு போலீசார், கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 3 நகைக்கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மார்த்தாண்டத்தில் சிலம்பா என்ற நகைக்கடையில் 200 சவரன் நகை சூறையாடப்பட்டுள்ளது. அடுத்த சிலநாட்களில், அதே பகுதியில், பேருந்து நிலையம் அருகே விக்ரம் என்பவரின் வீடு மற்றும் நகைக்கடையில் 3 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, குற்றவாளிகள் யாரும் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், தற்போது மேலும் ஒரு நகைக்கடையில் இக்கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதனால், குமரி மாவட்டத்தில் நகைக்கடைகளை குறிவைத்து, கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி வருவதால், வியாபாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: