டாப்சிலிப்பில் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது

பொள்ளாச்சி:  பொள்ளாச்சியை அடுத்த  ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப்பில்,  யானைகள் புத்துணர்வு முகாம் நேற்று துவங்கியது. தொடர்ந்து 48 நாட்கள் நடக்கிறது என்று, வனத்துறையினர் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப்(உலாந்தி) வனச்சரகத்தில் கோழிக்கமுத்தி யானைகள் முகாம் உள்ளது. இங்கு, 26 யானைகள், வளர்ப்பு யானைகளாக வனத்துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. இதில் 4 யானைகள் வரகளியாறு முகாமில் கும்கிகளாக உள்ளன. இங்கு யானைகள் புத்துணர்வு முகாம் நேற்று துவங்கியது.  புத்துணர்வு முகாம் துவங்குவதற்கு முன்னதாக, முகாம் அருகே உள்ள ஆற்றில் அனைத்து யானைகளும் நீராட்டப்பட்டது.

இதையடுத்து, அங்குள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பின், யானைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கோழிக்கமுத்தி முகாமில் கட்டப்பட்ட மூங்கில் தடுப்பு சுவரின் பின்பகுதியில், யானைகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. காலை சுமார் 10.30மணியளவில் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது. இதில், வால்பாறை எம்எல்ஏ கஸ்தூரி வாசு கலந்து கொண்டு யானைகளுக்கு உணவு வழங்கி துவக்கி வைத்தார்.

வனச்சரகர்கள் சக்திவேல், காசிலிங்கம் மற்றும் வனத்துறையினர், மலைவாழ் மக்கள், சுற்றுலா பயணிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற சுற்றுலா பயணிகள் பலர், யானைகளுக்கு உணவு வழங்கியதுடன். அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

டாப்சிலிப் கோழிக்கமுத்தி முகாமில் நேற்று துவங்கிய யானைகள் புத்துணர்வு முகாம்,  மார்ச்  மாதம் 24ம் தேதி வரை தொடர்ந்து 48 நாட்கள் நடக்கிறது. இந்த புத்துணர்வு முகாமின்போது, அனைத்து யானைகளுக்கும்  மூலிகை கலந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள், பாசிபயிறு, கொள்ளு, கீரை வகைகள், வாழைப்பழம், கரும்பு உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்படுகிறது. தினமும் மாலைநேரத்தில், யானைகளுக்கு நடைபயிற்சியும் அளிக்கப்படும்; என வனத்துறையினர் தெரிவித்தனர்.

வரகளியாரில் அரிசி ராஜாவுக்கும் புத்துணர்வு  முகாம்

பொள்ளாச்சியை அடுத்த அர்த்தனாரிபாளையம் மற்றும் ஆண்டியூர் பகுதி தோட்டங்களில் அட்டகாசம் செய்ததுடன், பலரை உயிர் பலி வாங்கிய அரிசி ராஜா என்ற அடைமொழி கொண்ட ஆண் யானையை, கடந்த நவம்பர் 14ம் தேதியன்று மயக்க ஊசிபோட்டு கும்கிகள் உதவியுடன் வனத்துறை மூலம் பிடிக்கப்பட்டது. பின் அதனை,  டாப்சிலிப்பிலிருந்து சுமார் 25கிலோ மீட்டர் தூரமுள்ள வரகளியாறு முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைக்கப்பட்டு வனத்துறை மூலம் பரமரிக்கப்படுகிறது. தற்போது கோழிக்கமுத்தி முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் துவங்கப்பட்டுள்ள நிலையில், வரகளியாறு கூண்டில் உள்ள அரிசி ராஜா மற்றும் அந்த யானை அடைக்கப்பட்ட மரக்கூண்டை சுற்றிலும் நிறுத்தப்பட்ட பாரி, லட்சுமி உள்ளிட்ட 4 யானைகளுக்கும் புத்துணர்வு முகாம் நேற்று துவங்கியது.

Related Stories: