இன்று முதல் அமல் மதுபானம் விலை அதிரடி உயர்வு : டாஸ்மாக் நிர்வாகம் முடிவு

சென்னை : டாஸ்மாக் மதுபானம் விலையை அதிரடியாக உயர்த்தி தமிழக உத்தரவிட்டுள்ளது. இதன்படி டாஸ்மாக்கில் குவார்ட்டர், பீர் விலை தலா ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2200 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தமிழகத்தில் தற்போது 5,152 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. மேலும் 1872 கடைகள் பாருடன் இணைந்து செயல்பட்டுவருகிறது. இந்த கடைகள் விற்பனைக்கு ஏற்றவாறு ஏ,பி,சி என தரம் பிரிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து அயல்நாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் 165 எப்எல் வகை கடைகளும் செயல்பட்டுவருகிறது. சாதாரண நாட்களில் ரூ.80 முதல் ரூ.90 கோடி வரையிலும் விழா நாட்களில் ரூ.120 முதல் ரூ.180 கோடி வரையிலும் மது விற்பனை நடைபெறுகிறது. 2018 -19 ல் டாஸ்மாக் ரூ. 31,157.83 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மாதம்தோறும் சராசரியாக, 50 லட்சம் பெட்டி மது வகைகளும், 20 லட்சம் பெட்டி பீர் வகைகளும் விற்பனையாகின்றன.2017 -18 ரூ. 26797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2017 -18ம் ஆண்டை காட்டிலும் 2018-19ம் ஆண்டிற்கான டாஸ்மாக் வருவாய் ரூ. 4359.87 கோடி அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில், டாஸ்மாக் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 31 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. எனினும் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு இந்த வருவாய் போதுனமானதாக இல்லை. எனவே நிதியில் சுயசார்பு அடையும் வகையிலும் பொதுமக்களின் எதிர்ப்பு கிளம்பாமலும் இருக்க தமிழக அரசு முடிவு செய்தது. பால் விலை, மின்சாரம், பஸ் கட்டணம் உயர்த்தினால் அரசின் வருவாய் அதிகரிக்கும் என்றாலும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டும். அது வரும் சட்டமன்ற தேர்தலில் பாதிக்கும் என்று தமிழக அமைச்சரவையில் கூறப்பட்டது. எனவே, அவற்றின் விலையை உயர்த்த வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்தது.

எனினும் நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வரும் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. வீட்டு வரி உயர்வு போன்ற திட்டங்கள் ஓட்டு அரசியலுக்காக திரும்ப பெறப்பட்ட நிலையில், அரசின் வருவாய் பெருக்க ஒரே வழி டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்துவது என்றுதான் என்று தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பாது என்பதாலும் குடிமகன்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று விவாதிக்கப்பட்டது. மேலும் தேர்தல் வாக்குறுதிபடி 1000 டாஸ்மாக் கடைகள் மூடல், நேரம் குறைப்பு போன்ற காரணங்களால் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டது. இதனால் விலையை உயர்த்துவது எந்த விதத்திலும் ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்காது என்பதால் டாஸ்மாக் நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்தது. இது தொடர்பாக 4ம் தேதி நடந்த  அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதன்பிறகு டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி  180 மில்லி அளவு கொண்ட குவாட்டர், ரம், விஸ்கி, பிராந்தி, வோட்கா போ ன்ற மது வகைகளின் விலை ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பீர் விலையும் ரூ. 10 உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது பீர் குறைந்தபட்சம் ரூ. 100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பீர் குளிர்சாதன வசதியுடன் உள்ள கடைகளில் ரூ. 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. குவார்ட்டர் தற்போது குறைந்தபட்சம் ரூ.95 முதல் ரூ.230 வரை விற்பனை செய்யப்படுகிறது. உயர்ரக மதுபானங்கள் ரூ. 250 முதல் ரூ. 500 வரை விற்பனை செய்யப்படுகிறது. 2014ம் ஆண்டு டாஸ்மாக் மதுபானங்களின் விலை குவாட்டருக்கு ரூ.8 உயர்த்தப்பட்டது. பீர் விலையானது 2014ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் தற்போதுதான் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: