டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு முறைகேடு விவகாரம்; சரணடைந்த இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு 14 நாள் நீதிமன்றக்காவல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார் இவருக்கு 14 நாள் நீதிமன்றக்காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்தாண்டு நடந்த குரூப் 4 மற்றும் கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடாக பலர் பணம் கொடுத்து வெற்றி  பெற்றது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி கொடுத்த புகாரின்படி சிபிசிஐடி போலீசார் இரண்டு வழக்குகளையும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக ஜெயகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் சித்தாண்டியை சிபிசிஐடி அறிவித்தது.

இருவரும் தேர்வு எழுதும் நபர்களிடம் குரூப் 4 தேர்வுக்கு ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலும், குரூப் 2ஏ தேர்வுக்கு ரூ.8 லட்சம் முதல் 15 லட்சம் வரை பணம் வசூலித்து முறைகேடாக பணம் கொடுத்த நபர்களை வெற்றி பெற செய்துள்ளனர்.குறிப்பாக குரூப் 2ஏ தேர்வில் சித்தாண்டி தனது மனைவி சண்முகபிரியாவை தமிழக அளவில் 5வது இடத்திலும், தனது சகோதரன் வேல்முருகனை 3வது  இடத்திலும், வேல்முருகன் மனைவியை 6வது இடத்திலும், இளைய சகோதரன் கார்த்தியை குரூப் 4 தேர்வில் 10 வது இடத்திலும் வெற்றி பெற வைத்துள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்திய போது தான் சித்தாண்டிக்கு இந்த மோசடியில் முக்கிய  பங்கு இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் சித்தாண்டி மற்றும் ஜெயகுமார் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விவகாரம் சிபிசிஐடி போலீசாருக்கு  தெரிந்ததும் சித்தாண்டி தனது மனைவி சண்முகபிரியாவுடன் தலைமறைவாகிவிட்டார்.

சிபிசிஐடி போலீசார் குரூப் 2ஏ தேர்வில் மோசடியாக வெற்றி பெற்ற சித்தாண்டியின் சகோதரன் வேல்முருகனை கடந்த 29ம் தேதி காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் சித்தாண்டியின்  முழு மோசடி விபரங்களும் குறித்து சிபிசிஐடி போலீசாருக்கு தெரியவந்தது. இளையான்குடி அருகே சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சித்தாண்டியை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவருக்கு பிப்ரவரி 20-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Related Stories: