வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: மறுபரிசீலனை மனுக்கள் மீதான விசாரணை கூடுதல் நீதிபதிகளுக்கு பரிந்துரைக்க முடியுமா? 9 நீதிபதிகள் இன்று ஆலோசனை

புதுடெல்லி: சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் மறுபரிசீலனை மனுவை, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்க முடியுமா என 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று ஆலோசனை நடத்துகிறது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதை மறுபரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன்  கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த மனுவை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைப்பதாக கடந்தாண்டு நவம்பர் 14ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ‘‘மூத்த வக்கீல்கள் பாலி எஸ்.நாரிமன், கபில் சிபல், ஷியாம் திவான், ராஜிவ் தவான், ராகேஷ் துவேதி ஆகியோர் வாதிடுகையில், ‘‘சபரிமலை  வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்புக்கு எதிரான மறுபரிசீலனை மனுவை அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைத்தது தவறு.

மத வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு பாகுபாடு தொடர்பான கேள்விகளை இதுபோல் பரிந்துரைக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை’’ என கூறினார். இதையடுத்து, சட்டத்தின் கேள்விகளை கூடுதல் அமர்வுக்கு பரிந்துரைக்க உச்ச  நீதிமன்றத்தால் முடியுமா என்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று ஆலோசிக்கிறது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ்,  சந்தானகவுடர், நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.காவை மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories: