பொதுநல வழக்குகளில் மனுதாரர்கள் ஆஜராவதை தடுக்கும் சுற்றறிக்கை ரத்து செய்ய வழக்கு

மதுரை:  சமூக ஆர்வலர்கள் டிராபிக் ராமசாமி, மதுரை கே.கே.ரமேஷ், நெல்லை கூனியூர் சுந்தரவேல் ஆகியோர் தனித்தனியே ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுக்களில், ‘பொதுநலன் கருதி சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்காக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளோம். இதில், நாங்களே ஆஜராகி வாதிடுகிறோம். இதனால், குறைந்த செலவில் எங்களால் வழக்கை நடத்த முடிகிறது. வக்கீல் வைத்துக் கொண்டு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. வழக்கு தாக்கல் செய்து, நாங்களே ஆஜராகி வாதிடுவதை கட்டுப்படுத்தும் வகையில் நவ. 4ல் நீதித்துறை சார்பில் ஓர் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், பொதுநலன் சார்ந்த பிரச்னைகளுக்காக வழக்கு தொடர்ந்து, உடனுக்குடன் தீர்வு காண முடியாது. இது அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே, பொதுநல வழக்குகளில் மனுதாரர்களே ஆஜராகி வாதிடுவதை கட்டுப்படுத்தும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்’ என கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சட்டத்துறை செயலர், சென்னை ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல், ஐகோர்ட் கிளை பதிவாளர்  ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: