மேலவளவு படுகொலை வழக்கில் விடுதலையான ஆயுள் கைதிகள் வேலூரில் தங்கவேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் : ஐகோர்ட் கிளையில் முறையீடு

மதுரை:  மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், சக்கரைமூர்த்தி, ஆண்டிச்சாமி ஆகிய 13 பேர், பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.  இவர்கள் விடுதலையை எதிர்த்து வக்கீல் ரத்தினம், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். அதில், ‘‘13 பேரை விடுவிக்கும் முன் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களிடம் தெரிவிக்கவில்லை. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் இவர்களை விடுவிக்க முடியாது. இது சட்டத்திற்கு எதிரானது. விடுவிக்கும் முன் இதுதொடர்பான முந்தைய வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் கருத்தில் கொள்ளப்படவில்லை. பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, 13 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், விடுதலை செய்யப்பட்ட அனைவரும் வேலூரில் தங்கியிருக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விடுவிக்கப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘வேலூரில் தங்கியிருக்க வேண்டுமென்ற நிபந்தனையால் பலரது குடும்பமும் மிகுந்த சிரமத்தில் உள்ளது. ஒவ்வொருவரின் குடும்பமும் பல ஊர்களில் உள்ளது. இதனால், குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. எனவே, வேலூரில் தங்க வேண்டுமென்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும்’’ என்றார். இதையடுத்து மனு மீதான விசாரணையை பிப். 18க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: