நிலத்தடி நீர் திருட்டு எதிரொலி சட்டவிரோதமாக செயல்படும் வாட்டர் கம்பெனிகள், நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

* 1 வாரத்துக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு

* கலெக்டர்களுக்கு தலைமை பொறியாளர் கடிதம்

சென்னை: சட்டவிரோதமாக செயல்படும் மினரல் வாட்டர் கம்பெனிகள், தொழில்நிறுவனங்களுக்கு கலெக்டர்கள் நோட்டீஸ் அளித்து வரும் நிலையில், 1 வாரத்துக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் குடிநீர், பாசனம் மற்றும் இதர தேவைகளுக்கு நிலத்தடி நீர் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மேலும் வணிக நிறுவனங்களும் தங்களது பயன்பாட்டிற்கு நிலத்தடி நீரை பயன்படுத்துகின்றன. இதனால், நிலத்தடி நீர் மட்டம் அதளபாதாளத்துக்கு சென்று விட்டது. எனவே, நிலத்தடி நீர் எடுப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.  இந்நிலையில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்க தடை விதிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், நிலத்தடி நீர் ஆதார விவர குறிப்பு மைய தலைமை பொறியாளர் பிரபாகர் அனைத்து கலெக்டர்களுக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் நிறுவனங்கள், மினரல் வாட்டர் கம்பெனிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு நோட்டீஸ் அளித்து விவரம் கேட்க  வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் அந்தெந்த மாவட்ட கலெக்டர்கள் சார்பில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மினரல் வாட்டர் கம்பெனிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளித்து வருகின்றனர். மேலும், அவர்களுக்கு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் பேரில் அவர்களுக்கு சீல் வைப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: