சத்தமில்லாமல் சாதிக்கும் மாநிலம்: கேரளாவுக்கு புதிய பயணிகள் ரயில்கள்...தமிழகத்துக்கு தயவு கிடைக்குமா?

நாகர்கோவில்: குமரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், பயணிகள் அதிகளவில் தற்போது ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் ரயில் பயணமும் பொதுமக்களை பெரும் சோதனைக்கு உள்ளாக்கி வருகிறது.  திருவனந்தபுரத்தில் உள்ள டெக்னோ பார்க், ராக்கெட் நிலையம், விமான நிலையம், வங்கிகள், மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இது தவிர 100க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் உள்பட பொது மக்கள் பலரும் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக திருவனந்தபுரத்துக்கு ரயிலில் சென்று வருகின்றனர்.

தற்போது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்ல, காலை 4.05க்கு புறப்படும் நாகர்கோவில் - மங்களூரு பரசுராம் ரயில், 4.30க்கு புறப்படும் மதுரை - புனலூர் பயணிகள் ரயில், 6.30க்கு புறப்படும் நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில், 7 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி - மும்பை எக்ஸ்பிரஸ், 7.55க்கு புறப்படும்  நாகர்கோவில் - கொச்சுவேளி ரயில், 9.40க்கு புறப்படும் சென்னை - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே உள்ளன. கடந்த மே மாதம் 1ம் தேதியில் இருந்து கன்னியாகுமரி  - மும்பை ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு புறப்படும் கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கன்னியாகுமரியில் இருந்து காலை 6.40 மணிக்கு பதிலாக 8.25 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவிலுக்கு 8.45, திருவனந்தபுரத்துக்கு 10.15, கொல்லத்துக்கு 11.30 மணிக்கும் போய் சேருமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் காலை 9 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டிய குமரி மாவட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதையடுத்து திருவனந்தபுரம் - கொல்லம் மார்க்கத்தில் தற்போது அலுவல் நேரத்துக்கு பயணம் செய்யும் கேரள பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் (56310) பயணிகள் ரயில் கொல்லம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரக்கு தினசரி செல்லும்  பயணிகள் வசதிக்காக எந்தவொரு மாற்று ஏற்பாடும் செய்யவில்லை. தற்போது குமரி மாவட்ட பயணிகள் திருவனந்தபுரத்துக்கு செல்லும் 2 பயணிகள் ரயிலை மட்டுமே நம்பி உள்ளனர்.

நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் பரசுராம் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி 2014ம் ஆண்டுகளில் மும்பை ரயில் புறப்பட்டு சென்ற கால அட்டவணைபோல 6 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லுமாறு இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். அதேபோல நாகர்கோவிலில் இருந்து  திருவனந்தபுரம் செல்லும் முதல் பயணிகள் ரயிலின் கால அட்டவணையை 7 மணிக்கு புறப்படுமாறு மாற்றி 8.50க்கு திருவனந்தபுரம் செல்லுமாறு இயக்கலாம். கேரளாவில் கண்ணூர் - கோழிக்கோடு பயணிகள் ரயில் ஷொர்னூர் வரை பிப்ரவரி 2ம் தேதி முதல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  இதற்கு முன்பும் கேரளாவில் பல்வேறு புதிய ரயில்கள் இதுபோன்று பல்வேறு காலகட்டங்களில் சத்தமில்லாமல் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

கேரளாவில் குருவாயூர் - திருச்சூர் பயணிகள் ரயில், கொல்லம் - புனலூர் பயணிகள் ரயில் என 2 ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக குருவாயூர் - புனலூர் பயணிகள் ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் 294 கி.மீ தூரத்துக்கு ஒரே ரயிலாக இயக்கப்படுவதால் இந்த பகுதி பயணிகள் நேரடியாக குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முடிகிறது. இதைப்போல் கோட்டையம் - எர்ணாகுளம் (56386/56389) மற்றும் எர்ணாகுளம் - நிலாம்பூர் பயணிகள் ரயில் (56363/56362) ஆகிய 2 ரயில்களையும் கோட்டையம் - நிலாம்பூர் பயணிகள் ரயில் என இணைத்து ஒரே ரயிலாகவும் இயக்கப்பட்டது.

இதுபோல திருநெல்வேலி - நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் - கொச்சுவேளி பயணிகள் ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக திருநெல்வேலி - கொச்சுவேளி என இயக்க வேண்டும். மறுமார்க்கமும் திருவனந்தபுரம் - நாகர்கோவில், கன்னியாகுமரி - திருநெல்வேலி ஆகிய 2 பயணிகள் ரயில்களையும் இணைத்து ஒரே ரயிலாக திருவனந்தபுரம் - திருநெல்வேலி என இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும்போது திருநெல்வேலி மாவட்ட பயணிகள் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு அலுவல் நேரத்துக்கு செல்ல ரயில்வசதி கிடைக்கும்.

Related Stories: