குடிநீர் வீணாவதை கண்டித்து நடுரோட்டில் குளிக்கும் போராட்டம்: சமூக ஆர்வலரால் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதை கண்டித்து சமூக ஆர்வலர் நடுரோட்டில் குளிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் நகர ரோடுகள் அகலப்படுத்தப்பட்டதால் முதல் மற்றும் இரண்டாவது குடிநீர் திட்டங்களில், பகிர்மான குழாய்கள் பதித்துள்ள இடம் ரோட்டின் மையப்பகுதியாகிவிட்டன. கனரக வாகனங்களின் அழுத்தத்தால், அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் கண்டுகொள்வதில்லை. மாநகராட்சியில், குடிநீர் குழாய் ஆய்வாளர்கள் பலர் இருந்தும், குழாய் உடைப்பு பிரச்னை தொடர் கதையாகவே இருக்கிறது.

‘உடைப்பு, எங்கள் பகுதியில் அல்ல’ என்று கூறி, குடிநீர் வடிகால் வாரியம், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒதுங்கிக் கொள்வதால், இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுவதில்லை. பி.என்.ரோடு, போயம்பாளையம், பிச்சம்பாளையம் புதூர், மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம், பங்களா ஸ்டாப், புஷ்பா தியேட்டர், குமார் நகர், பெரிச்சிபாளையம் பிரிவு, பெரிச்சிபாளையம் வாட்டர் டேங்க், வினோபா நகர், வெள்ளியங்காடு 60 அடி ரோடு, நடராஜா தியேட்டர் ரோடு, சபாபதிபுரம், மங்கலம் ரோடு கோழிப்பண்ணை, குளத்துப்புதூர் போன்ற இடங்களில், அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகிறது. ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

கோடை உக்கிரம் அதிகரித்தால், குடிநீர் தேவையும் அதிகரிக்கும். அப்போது, மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்க முடியாத நிலை ஏற்படும். ஆனால், இதை தவிர்க்கும் விதத்தில், மாநகராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. இந்நிலையில், பங்களா பஸ் நிறுத்தம் அருகே கடந்த சில நாட்களாக குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் விரயமாகி வருகிறது.

இது குறித்து பட்டாம்பாளையத்தை சேர்ந்தவரும், பங்களா பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகன ஒர்க்‌ஷாப் வைத்திருப்பவரும், சமூக ஆவர்வலரான சந்திரசேகர் மற்றும் அப்பகுதியினர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் வழக்கம்போல் கண்டும் காணாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்து வீணாகும் குடிநீரில் குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சந்திசேகர் கூறுகையில், தினந்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வரும் நிலையில் தனது போராட்டத்திற்கு பிறகாவது, மாநகராட்சி நிர்வாகம் அதனை சரி செய்ய முன்வர வேண்டும் என்றார்.

Related Stories: