டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஜெயக்குமாரின் வங்கி கணக்குகளை முடக்கி சிபிசிஐடி அதிரடி

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஜெயக்குமாரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. குரூப்-4 தேர்வில் மோசடி செய்து தேர்ச்சி பெற்றவர்கள் ஜெயக்குமாரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர். இடைத் தரகர் ஜெயக்குமார், தலைமைக் காவலர் சித்தாண்டியை பிடிக்க முடியாமல் சிபிசிஐடி திணறி வரும் நிலையில்,  ஜெயக்குமார் தன் பெயரிலும் தனது உறவினர்கள் பெயரிலும் வைத்திருந்த பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிக் கணக்குகளை சிபிசிஐடி போலீஸ் முடக்கியது.

யார் அந்த ஜெயக்குமார் ?

*குரூப்–4 தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் வீடு சென்னை முகப்பேர் மேற்கில் உள்ளது. அந்த வீட்டில்  போலீசார் நடத்திய சோதனையில், லேப்–டாப், பென்டிரைவ், முக்கிய ஆவணங்கள், 60–க்கும் மேற்பட்ட பேனாக்கள் கைப்பற்றப்பட்டன.

*மேலும், ஜெயக்குமார் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன. அவர் பற்றிய தகவல் அளிக்க புகைப்படம் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. அவர் குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று நேற்று இரவு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்தனர்.

வங்கி கணக்குகள் முடக்கம்

*இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஜெயக்குமாரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அரசு வேலை வேண்டி ஏராளமானோர் 8 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஜெயக்குமாரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர்.

*அந்த பணத்தை எடுத்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக ஜெயக்குமாரின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. சிபிசிஐடியின் கோரிக்கையை ஏற்று வங்கிகளும் கணக்குகளை முடக்கும் பணிகளை மேற்கொண்டு உள்ளன.

*அது மட்டுமல்லாமல் ஜெயக்குமார் வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலத்திற்கோ தப்பிச் செல்லாமல் இருக்க சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களிலும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். அதே போல ரயில் நிலையங்களிலும் ஜெயக்குமாரின் புகைப்படங்களை வைத்து தேடும் பணி நடைபெற்று கொண்டிருப்பதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: