ஆந்திராவில் விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் 40 மணி நேரமாக கேஸ் கசிவு : நிறுத்த முடியாமல் நிபுணர்கள் குழு திணறல்

திருமலை: ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. குழாயில் 40 மணி நேரமாக கேஸ் கசிந்து கொண்டுள்ளது. ஆந்திராவின் உப்பிடு கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு எரிவாயு கிணறு அமைக்கப்பட்டது. இந்த கிணற்றை ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசுக்கு வழங்கியது. பின்னர் இந்த எரிவாயு கிணற்றை கொல்கத்தாவை சேர்ந்த பிஎச்எப் நிறுவனம் ஒப்பந்த முறையில் மத்திய அரசிடமிருந்து பெற்று காஸ் உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை எரிவாயு கிணற்றில் இருந்து விவசாய நிலம் வழியாக செல்லும் பைப் லைனில் திடீரென உடைப்பு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் காஸ் வெளியேறியது. அப்போது அங்கு விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், கிராமமக்கள் மற்றும் பணியில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தீயணைப்பு வாகனங்கள்  காஸ் கசிவு ஏற்பட்ட இடத்தில் தண்ணீரை பீய்ச்சியடித்து வருகிறது.

எரிவாயு கிணற்றை ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ள பி.எச்.எப். நிறுவனம் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் நேற்றுமுன்தினம் மாலை முதல் மின்சாரம்,  செல்போன் டவர்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 40 மணி நேரத்திற்கு மேலாக காஸ் கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கண் எரிச்சல் மற்றும் உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கிணற்றில் ஏற்பட்ட வாயு கசிவை நிறுத்த முடியாமல் ஒ.என்.ஜி.சி. நிபுணர்கள் திணறி வருகி்ன்றனர்.

Related Stories: