சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதை நிறுத்தாவிட்டால் தென்னிந்திய அளவில் லாரிகள் ஸ்டிரைக்: லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

பெங்களூரு: தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா நேற்று தினகரன் நிருபருக்கு அளித்த பேட்டி:சுங்க கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கப்படுகிறது. குறிப்பாக லாரி உரிமையாளர்களிடம் டோல் என்ற பெயரில் அரசு கொள்ளை அடிக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 30 சுங்கச்சாவடிகள் தேவையின்றி செயல்படுகின்றன.  ரோடு அமைப்பதற்கு செலவிடப்பட்ட பணம் வசூலிக்கப்பட்ட நிலையில் அவை தொடர்ந்து இயங்குகின்றன. இந்தியா முழுவதும் லாரிகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பதே எங்களின் கோரிக்கை ஆகும். ரோடு போக்குவரத்தை மேம்படுத்த நிதி தேவை என்பதையும் நாங்கள் மறுக்கவில்லை. மத்திய அரசின் சார்பில் ஏற்கனவே லாரி  உரிமையாளர்களிடம் டீசல் மீது 6 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

ஆனாலும் ரோடுகள் அமைக்கப்படும்போது சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியாருக்கு குத்தகை விடுவதன் மூலமாக லாரி உரிமையாளர்கள் மட்டும் இன்றி இரு சக்கர  வாகன ஓட்டிகள் உள்ளிட்ட மக்கள் அனைவரும்  பாதிக்கப்படுகிறார்கள். இம்மாதம் 27ம்  தேதி சென்னையில் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடக்கிறது. அக்கூட்டத்தில் லாரி உரிமையார்களின் பிரச்னை குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது  என்பதே எங்களின் கோரிக்கை. இதை மத்திய மாநில அரசுகள் ஏற்கவில்லை என்றால் தென்னிந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும். இவ்வாறு சண்முகப்பா கூறினார்.

Related Stories: