சேத்தியாத்தோப்பு அருகே அடிக்கடி விபத்து நடக்கும் பரவனாற்று பாலத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே பரவனாற்று பாலத்தின் அவல நிலையால் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே பாலத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கரைமேடு என்ற இடத்தில் பரவனாற்று பாலம் அமைந்துள்ளது. கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பகுதிகளை இணைக்கும் பாலமாகவும் இருந்து வருகிறது. இப்பாலத்தின் வழியாக  தினசரி ஆயிரக்கணக்கில் சிறியதும், பெரியதுமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. பரவனாற்று பாலம் மிக குறுகியதாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கிறது.  

  இப்பாலம் தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோதே இதனை செப்பனிட்டு அல்லது புதிய பாலமாகவோ அமைக்க  வேண்டும் என வாகன அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் இப்பாலம் புதியதாக மாற்றியமைக்கப்படாமல் வலுவிழந்து காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு    இப்பாலத்தின் வழியாக போர்வெல் இயந்திரம் சென்றபோது பாலத்தின் சுவற்றில் மோதி பரவனாற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. தற்போதைய நிலையில் பாலத்தின் தடுப்புச்சுவர்கள் உயரம் குறைவாகவும், சில இடத்தில் தடுப்புச்சுவர்கள் இல்லாமலும் உள்ளது.  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தற்போது விக்கிரவாண்டி-தஞ்சை நான்குவழிச்சாலை பணிகள் தற்போது நடந்து வருகிறது. ஆனால் குறுகியதாக இருக்கும் இப்பாலத்தினை தரமானதாக மாற்றியமைக்கவில்லை.எனவே இப்பாலத்தை அகலப்படுத்தி, பக்கவாட்டு தடுப்புச்சுவர்களை அமைத்து தரமான பாலமாக மாற்றியமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories: