தாய்மொழிப்பற்று உள்ளது என்பதால் பிற மொழிகளைப் புறக்கணிக்கக் கூடாது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் பேச்சு

சென்னை: தாய்மொழி மீதான பற்றென்பது நாம்  பிற மொழிகளைப் புறக்கணிப்பதற்குச் சமம் என்று நினைக்க கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாடு  புதுச்சேரி  பார் கவுன்சிலில் 409 பேர் வக்கீல்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று  நடைபெற்றது.  பார் கவுன்சில் பதிவுக்குழுத் தலைவர் கே.பாலு புதிய வக்கீல்களுக்கான உறுதிமொழியை வாசிக்க, வக்கீல்கள் பதிவு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழில் பேச்சைத் தொடங்கினால் கைத்தட்டப்படுவது தமிழ்நாட்டில் மட்டும் தான். கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக உங்களை வேறு மொழிகள் கற்றுக் கொள்ளக்கூடாது என நான் கூற மாட்டேன். வக்கீல் தொழிலுக்கு தாய்மொழிப் பற்றுடன் ஆங்கிலப் புலமையை  சரிசமமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். அது தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்குச் சென்று வழக்காட உதவும். வக்கீல் தொழிலில் தொழில் தர்மம் என்ற வார்த்தையைப் புரிந்து கொள்வது சிக்கலானது. இந்த தொழிலைப் பொறுத்தவரை உங்களிடம் வரும் வழக்காடிகளின் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துக் கூறுவதே தவிர வெற்றி பெறுவது தொழில் தர்மம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசியதாவது:

புதிய வக்கீல்களான நீங்கள் நீதித்துறையின் எதிர்காலங்கள். நீதித்துறையில் பணியாற்றுபவர்கள் பெறும் ஊதியத்துக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர் பெறும் ஊதியத்துக்கும் வித்தியாசம் உள்ளது. வக்கீல்களாக வருபவர்கள் பணியாற்ற  ஆணையங்கள், தீர்ப்பாயங்கள் என பல்வேறு இடங்கள் உள்ளன. எனவே அதற்கேற்ற தகுதி உடையவர்களாக உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மூத்த வக்கீல்களிடம் குறைந்தது மூன்றாண்டுகளாவது பணியாற்றுங்கள்.  காவல் நிலையங்களுக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்யும் வக்கீல்களாக  மாறாதீர்கள்.

வக்கீல்களில் சிலர் மோட்டார் வாகனத் தீர்ப்பாயம், திருமணத் தொடர்பான தீர்ப்பாய வழக்குகளின் மூலம் பணம் பெறுகின்றனர்.அது பாவத்தினாலும், ரத்தத்தாலும் பெறக்கூடிய பணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வழக்காடிகளிடம் கட்டணம் வாங்குங்கள் அவர்களிடம் பங்கு கேட்காதீர்கள். கிராமப்புறங்களிலிருந்து வக்கீலாக வந்திருப்பவர்கள் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வக்கீல்களில் சிலர் மோட்டார் வாகனத் தீர்ப்பாயம், திருமணத் தொடர்பான தீர்ப்பாய வழக்குகளின் மூலம் பணம் பெறுகின்றனர்.அது பாவத்தினாலும், ரத்தத்தாலும் பெறக்கூடிய பணம்.

Related Stories: