தூய்மை காவலர்கள் ‘ஆப்சென்ட்’ கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய களமிறங்கிய கவுன்சிலர், இளைஞர்கள்: வதிலை அருகே பொதுமக்கள் பாராட்டு

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே வத்தல்பட்டியில் தூய்மை காவலர்கள் வராததால் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய கவுன்சிலர், இளைஞர்கள் களமிறங்கியதை பொதுமக்கள் பாராட்டினர். வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், நடகோட்டை ஊராட்சியில் 8வது வார்டு பகுதி வத்தல்பட்டி கிராமம். இங்கு அருள்முருகன் என்பவர் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இவர் வெற்றி பெற்றது முதல் இப்பகுதியில் உள்ள கிழக்கு தெரு கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை. குப்பைகளை அகற்றவில்லை. இதனால் சிலருக்கு காய்ச்சல் போன்ற பல நோய்கள் ஏற்பட்டன.

இதைத்தொடர்ந்து அருள்முருகன், நடகோட்டை ஊராட்சி செயலாளர் ரஞ்சிதாவிடம் இனியும் தாமதிக்காமல் தூய்மை காவலர்களை அனுப்புங்கள் என கூறினார். அதற்கு ரஞ்சிதா, சம்பளம் தராததால் தூய்மை காவலர்கள் பணிக்கு வரவில்லை, அவர்கள் வந்ததும் அனுப்பி விடுகிறேன் என்றார். ஆனால் ஒருவாரமாகியும் தூய்மை காவலர்கள் வரவில்லை. இதனால் கழிவுநீர் அடைத்தும், குப்பைகள் குவிந்தும் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீச துவங்கியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அருள்முருகனை சூழ்ந்து கொண்டு எப்போதுதான் சாக்கடையை அள்ளுவீர்கள் என வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து அருள்முருகன் ஒரு மினிவேனை வர சொல்லி தானே களதத்ில் இறங்கி ஒரு இரும்பு தட்டில் கழிவுநீர் குப்பைகளை அள்ளி வண்டியில் ஏற்றினார். இதை கண்ட அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் அவருக்கு உதவி செய்தனர். இந்த செயலை கண்ட பொதுமக்கள் அருள்முருகனையும், இளைஞர்களையும் பாராட்டினர். மேலும் தூய்மை காவலர்கள் மூலம் முறையாக கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: