ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு ரசாயன பேரல் வெடித்து தொழிலாளி பலி

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே பேரல் வெடித்து சிதறியதில் வடமாநில வாலிபர் பரிதாபமாக பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார்.குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (37). இவருக்கு ஸ்ரீபெரும்புதூர் அருகே அமரம்பேடு பகுதியில் பழைய மற்றும் கழிவு பிளாஸ்டிக் பேரல்களை சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. இங்கு, வடமாநிலத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், குடும்பத்துடன் தங்கி வேலை செய்கின்றனர். இந்த குடோனில் பிளாஸ்டிக் பேரல்களை இயந்திரம் மூலம் சிறுசிறு துண்டுகளாக உடைத்து, அவற்றை சென்னை புளியந்தோப்பு, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் மறுசுழற்சிக்கு அனுப்புவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஒரு கெமிக்கல் கழிவு பேரலை மெஷின் மூலம் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்திரிக பஸ்வான் (32), அவரது மைத்துனர் சஞ்சய் (25) ஆகியோர் உடைத்து கொண்டிருந்தனர். அப்போது மெஷினின் அழுத்தம் தாங்காமல் திடீரென பேரல் வெடித்து சிதறியது.

இதில் சந்திரிக பஸ்வான், சஞ்சய் ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதை பார்த்ததும், சக ஊழியர்கள் அவர்களை மீட்டு, பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் சந்திரிக பஸ்வானை மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் இரவு பரிதாபமாக இறந்தார்.

புகாரின்படி சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடோன் உரிமையாளர் ராஜாவிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.கடந்த வாரம், பெரும்புதூர் அருகே ஒரு பெண், குப்பையில் கிடந்த பேரலை உடைக்க முயன்றார். அப்போது அதில் இருந்த கெமிக்கலை வெளியே கொட்டியபோது, அது வெடித்தது. இதனால் அவர் சுமார் 40 மீட்டர் தூரத்துக்கு வீசி எறியப்பட்டு துடிதுடித்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: