நித்யானந்தாவிடம் நோட்டீசை நேரில் வழங்க வேண்டும் : கர்நாடக போலீசுக்கு நீதிபதி உத்தரவு

பெங்களூரு: வழக்கு  விசாரணையில் ஆஜராகாமல் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு வரும்  நித்யானந்தாவை நேரில் சந்தித்து நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று சிஐடி  போலீசாருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நித்தியானந்தா மீது கொலை, கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம் உள்பட பல  வழக்குகள் பிடதி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளதுடன் ராம்நகர்  நீதிமன்றத்திலும் விசாரணை நடந்து வருகிறது.  நித்யானந்தா ஆசிரமத்தில்  சீடர்களாக இருந்த லெனின் கருப்பன், ஆர்த்திராவ் ஆகியோர் கொடுத்துள்ள  புகாரின் பேரில் நித்யானந்தாவை பிடதி போலீசார் கடந்த 2010 ஏப்ரல் 11ம் தேதி  கைது செய்தனர். 53 நாள் சிறையில் இருந்த பிறகு அவருக்கு 2010 ஜூன் 11ம் தேதி கர்நாடக ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.  

இந்நிலையில், லெனின்  கருப்பன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு மனு நேற்று நீதிபதி குன்ஹா  அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்  வாதிடும்போது, ‘‘கடந்த 2018 ஜூன் 5ம் தேதி ராம்நகரம் நீதிமன்றத்தில் ஆஜரான  நித்யானந்தா, அதன் பின் நடந்த 50க்கும் மேற்பட்ட வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை. எனது கட்சிக்காரர் ஓரிரு விசாரணையில் ஆஜராகவில்லை என்றாலும்  ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது. நித்யானந்தாவின்  வக்கீல்கள் பொய் தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்து வருகிறார்கள். இந்த  வழக்கை விசாரணை நடத்தி வரும் அதிகாரி நீதிமன்றத்தில் உள்ளார். அவரிடம்  நித்யானந்தா எங்குள்ளார் என்று கேளுங்கள்,’’ என்று நீதிபதியிடம் வேண்டினார்.

உடனே  விசாரணை அதிகாரியை அழைத்த நீதிபதி, ‘இந்த வழக்கில் என்ன நடந்து வருகிறது.  குற்றவாளி 50க்கும் மேற்பட்ட முறை விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். அவர்  இந்தியாவில் உள்ளாரா? அல்லது வெளிநாட்டில் பதுங்கியுள்ளாரா? இந்தியாவில்  இருந்தால் ஏன் நீதிமன்றம் வழங்கும் நோட்டீசை கொடுக்காமல் உள்ளீர்கள்?’ என்று கேள்விகள் எழுப்பினார். அதற்கு பதிலளித்த விசாரணை அதிகாரி, ‘‘நித்யானந்தா இந்தியாவில் இல்லை.  வெளிநாட்டில் இருப்பதாக தெரிய வருகிறது. அவரது பாஸ்போர்ட்  காலாவதியாகி உள்ளது. இன்னும் புதுப்பிக்கவில்லை,’’ என்றார். உடனே  குறுக்கிட்ட நீதிபதி, ‘‘இந்த வழக்கில் நீதிமன்றம்  பிறப்பித்துள்ள உத்தரவை நித்யானந்தாவை நேரில் சந்தித்து வழங்க வேண்டும்.  மேலும், இவ்வழக்கு தொடர்பான முழு விசாரணை அறிக்கையை வரும் பிப்ரவரி 3ம் தேதி  பிற்பகல் 2.30 மணிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்,’’ என்று  உத்தரவிட்டார்.

Related Stories: