முன்னாள் நீதிபதிகள் பேரணியில் பங்கேற்றது நீதிமன்ற மாண்பை கெடுப்பதாக உள்ளது; தலைமை நீதிபதி கண்டனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது குறித்து தலைமை நீதிபதி சாஹி கண்டனம் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஹரி பரந்தாமன், கண்ணன், அக்பர் அலி ஆகியோர் பேரணியில் பங்கேற்றது வேதனை தருவதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைதி ஊர்வலத்தை நேற்று நடத்தினர். இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஹரிப்பரந்தாமன் கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பேரணியாக புறப்பட்டு குறளகம், எஸ்பிளானேடு நுழைவு வாயில் வழியாக அம்பேத்கர் சிலை வரை சமத்துவம், மதசார்பின்மை, ஜனநாயகம், அரசியலமைப்பு பாதுகாப்பை வலியுறுத்தி இந்த அமைதியான பேரணி நடத்தப்பட்டது.  இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பதாகைகளை ஏந்தியும் அந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது குறித்து தலைமை நீதிபதி சாஹி கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் நீதிபதிகள் பேரணியில் பங்கேற்றது நீதிமன்ற மாண்பை கெடுப்பதாக உள்ளதாக தெரிவித்த தலைமை நீதிபதி, நீதிமன்றம் பொதுசொத்து என்பதை உணர்ந்து முன்னாள் நீதிபதிகள் செயல்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும் முன்னாள் நீதிபதிகள் அத்துமீறி பேரணி நடத்தியது பற்றி உயர்நீதிமன்ற பாதுகாப்புக்குழு விசாரிக்கவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: